“இரவின் நிழல், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படமென ஏற்க மறுக்கின்றனர்”-இயக்குநர் பார்த்திபன்

Cannes திரைப்பட விழாவிற்கு அனுப்பப்பட்டுள்ள தன்னுடைய இரவின் நிழல் திரைப்படத்தை, ஒரே ஷாட்டில் எடுத்த படம் என்பதை திரைப்பட விழா குழுவினர் ஏற்க மறுக்கின்றனர் என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் எழில் இயக்கத்தில் ஆர்.பார்த்திபன், கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள ‘யுத்த சத்தம்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் பார்த்திபன், இயக்குனர் எழில், நாயகி சாய்பிரியா, இயக்குனர் சங்க நிர்வாகிகள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் பேசிய பார்த்திபன் ‘யுத்த சத்தம்’ திரைப்படம் சிறப்பாக வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்தப் படத்தில் தான் செய்த சில மாற்றங்களை இயக்குனர் எழில் நேர்மையான முறையில் கையாண்டதாக மேடையில் வெளிப்படுத்தினார். இதுகுறித்து அவர் பேசுகையில், “இன்றைய காலகட்டத்தில் பல இயக்குனர்கள் அதை செய்வதில்லை. ஒரு இயக்குனர் நான் எழுதிய காட்சிகளையே அவர் படமாக்கும்பொழுது எனக்கு எதுவும் தெரியவில்லை என்பது போலும், புதிதாக அவர் சொல்லி கொடுப்பது போலவும் நடந்துகொண்டுள்ளார். ஆனால், எழில் என்னை மேடையில் பாராட்டியுள்ளார். இதுவே அவரின் நேர்மையை வெளிப்படுத்துகிறது” என கூறினார்.

image

விழாவில் தொடர்ந்து பேசிய அவர், “இரவின் நிழல் படத்தை Cannes பட விழாவிற்கு அனுப்பியுள்ளோம். அந்தப் படம் 100 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக பத்து வருடம் போராடி, 90 நாட்கள் பயிற்சி எடுத்து படமாக்கினேன். 64 ஏக்கரில் 58 செட் அமைத்து எடுத்துள்ளோம். எனவே இரவின் நிழல் Non Linear முறையில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்பதை தைரியமாக கூறுவேன். ஆனால் அந்தப் படத்தை Cannes திரைப்பட விழாவில் ஒரே ஷாட்டில் எடுத்து என்பதை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். அது வெட்டி ஒட்டியது என தெரிவிக்கிறார்கள். இதுவே எனக்கு கிடைத்த பெருமை” என பார்த்திபன் கூறினார்.

சமீபத்திய செய்தி: திருக்குறளுடன் பேச்சை தொடங்கிய கதாநாயகி – நெகிழ்ந்து பாராட்டிய இயக்குநர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.