சட்ட மேலவையில் எம்.எல்.சி., பேச்சால் சுவாரசியம்| Dinamalar

பெங்களூரு:பெங்களூரில் ஹுக்கா பார், டான்ஸ் பார், காசினோ ரெக்ரியேஷன் கிளப்கள் குறித்து, சட்ட மேலவையில் சுவாரசியமான விவாதம் நடந்தது. இதனால், சிறிது நேரம் சபையில் நகைச்சுவையான சூழ்நிலை ஏற்பட்டது.
சட்டமேலவை கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:காங்., — ரமேஷ்: பெங்களூரில் உள்ள ஹுக்கா பார்களில், ஹெர்பல் மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்ற விதிமுறை உள்ளது. ஆனால், கஞ்சா உட்பட தடை செய்யப்பட்ட பொருட்களும் பயன்படுத்தப்படுகிறது.

பெங்களூரு மாநகராட்சியினர், வர்த்தக உரிமம் வழங்குகின்றனர்.ஹுக்கா பார்களுக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல போலீசார் நடந்து கொள்கின்றனர். ‘பெங்களூரில் டான்ஸ் பார்கள் நடப்பதில்லை’ என, சபையில் பதிலளிக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்துக்கு பின், என்னோடு வாருங்கள். டான்ஸ் பாருக்கு அழைத்து செல்கிறேன்… நீங்களே கண்ணால் பாருங்கள்.

முதல்வர் பசவராஜ் பொம்மை: எங்கு அழைத்து செல்வீர்கள்?
அமைச்சர் மாதுசாமி: (நகைச்சுவையாக) ரமேஷ் நல்லவர் என எதிர்க்கட்சி தலைவரிடம் கூறியிருந்தேன். ஆனால் நீங்களோ, ‘ஹுக்கா பார், டான்ஸ் பார்’ என பேசுகிறீர்கள். நீங்கள் அங்கெல்லாம் ஏன் சென்றீர்கள்?நம் உள்துறை அமைச்சருக்கு, பெங்களூரை பற்றி தெரியாது. அவரை எங்கெங்கோ அழைத்து சென்று விடாதீர்கள். அவரது வீட்டினர் அவர் மீது ஓரளவு நம்பிக்கை வைத்துள்ளனர். அதை பாழாக்கி விடாதீர்கள்.

ரமேஷ்: எனக்கு சீட்டாட தெரியாது. நான் எங்கும் சென்றதில்லை. ஆனால் பெங்களூரில், ஹுக்கா பார்களால் மாணவர் சமுதாயம் பாழாகிறது. ஒரு போலீஸ் நிலையத்துக்கு, இடம் மாற்றல் பெற இரண்டு கோடி ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது.உப்பார்பேட் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், ரெக்ரியேஷன் கிளப்பில் தினமும் ஐந்து லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ரம்மி, ஸ்னோகர், கேரம் போன்ற பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கு பதில், சூதாட்டம் நடக்கிறது.
அப்போது முதல்வர், ஆளுங்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர் என, கட்சி பாகுபாடின்றி அனைவரும, ‘ஆமாம்’ என்பதை போல தலையசைத்தனர்.

அமைச்சர் அரக ஞானேந்திரா: ஹுக்கா பார், ரெக்ரியேஷன் கிளப்புகளுக்கு அவ்வப்போது சென்று தொந்தரவு கொடுக்கக்கூடாது என நீதிமன்றத்தின் உத்தரவு உள்ளது. அதனால் நம் போலீசார், ரிஸ்க் எடுத்து சோதனையிடுகின்றனர்.முந்தைய மாதம், மூன்று, நான்கு ஹுக்கா பார்களில் சோதனையிட்டு, அங்கு புகை பிடிக்கும் இடத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை சேகரித்து, தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர்.

தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தியிருந்தால், தயவு தாட்சண்யமின்றி, நடவடிக்கை எடுக்கப்படும்.பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளம் தலைமுறையினர், பெண்களும் கூட, இங்கு செல்வது எங்களின் கவனத்துக்கு வந்துள்ளது. இதுபற்றி போலீசார் கண்காணிக்கின்றனர். எங்கும் டான்ஸ் பார் நடக்கவில்லை. அவை மூடப்பட்டுள்ளன.

ம.ஜ.த., — போஜேகவுடா: டான்ஸ் பார்கள் சிறப்பாக செயல்படுகின்றன.

முதல்வர் பசவராஜ் பொம்மை: ஒரு காலத்தில், போஜே கவுடா, டான்ஸ் பார்களுக்கு நெருக்கமானவராக இருந்தார். தம் அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அவசரப்படுகிறார்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.