நீராவி முருகன்: மயானத்துக்கு வழிகாட்டிய அடாவடி வாழ்க்கை!

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரைச் சேர்ந்த நீராவி முருகன் கொலை, கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டதால் திண்டுக்கல் போலீஸார் அவரைப் பிடிக்க முயன்றபோது என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே நடந்த என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட நீராவி முருகனின் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டது.

மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த
நீராவி முருகன் உடல்

நீராவி முருகனின் பெற்றோர் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், அண்ணன் முத்துக்குமார் டெய்லராக புதியம்புத்தூரில் வேலை செய்து வந்தார். கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். அதனால் குடும்பத்தினர் ஒருவரும் உடலை வாங்க முன்வரவில்லை.

நீராவி முருகனின் அக்கா மாரியம்மாள் என்பவர் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள தெற்கு பரும்பூர் கிராமத்தில் வசித்து வருகிறார். அவர் கணவர் ஆறுமுகம் உள்ளூரில் தொழில் செய்கிறார். அதனால் அவர்களை அழைத்த காவல்துறையினர் உடலைப் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்கள். ஆனால், போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் வசிக்கும் தங்களால் உடலைக் கொண்டு சென்று அடக்கம் செய்ய வசதியில்லை என காவல்துறையினரிடம் தெரிவித்து விட்டனர். அதனால் நீண்ட வற்புறுத்தலுக்குப் பின்னரே மாரியம்மாளும் அவர் கணவரும் மருத்துவமனைக்கு வந்தார்கள்.

நீராவி முருகனின் அக்கா மாரியம்மாள், அவர் கணவர் ஆறுமுகம்

உடற்கூறு ஆய்வுக்குப் பின்னர் ஒப்படைக்கப்பட்ட நீராவி முருகன் உடலைப் பெற்றுக் கொண்ட மாரியம்மாள், நெல்லையை அடுத்த வி.எம்.சத்திரம் மின் மயானத்தில் தகனம் செய்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பினார். தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறையினர் தேடிய போதிலும் பண பலத்தால் ஏராளமான நண்பர்களின் உதவியுடன் பல்வேறு இடங்களில் தங்கித் தலைமறைவாக இருந்த ரௌடி நீராவி முருகன் இறுதிச்சடங்கில் உறவினர்கள் கூட வரத் தயங்கிய சூழல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.