கெஜ்ரிவால் வீட்டின் மீது பாஜகவினர் தாக்குதல்… சிசிடிவி கேமரா, தடுப்புகள் சேதம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு வெளியே உள்ள பொருள்களை பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (பிஜேஒய்எம்) உறுப்பினர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில், “டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டின் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்கள், சிசிடிவி கேமராக்களையும், பாதுகாப்பு தடைகளையும் சேதப்படுத்தினர். கேட்டில் உள்ள பூம் தடுப்புகளும் உடைக்கப்பட்டுள்ளன” என பதிவிட்டிருந்தார்.

மற்றொரு ட்வீட்டில், முதல்வர் கெஜ்ரிவாலின் வீட்டை பாஜக குண்டர்கள் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றனர். அவர்களைத் தடுப்பதற்குப் பதிலாக, பாஜக போலீஸார் வீட்டு வாசலுக்கு அழைத்து வந்துள்ளனர். இது ஒரு முன்கூட்டிய திட்டமிட்ட சதி. அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜகவால் தோற்கடிக்க முடியாததால், அவரைக் கொல்ல முயற்சிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டியிருந்தார்.

பாஜக இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா, டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் தஜிந்தர் பால் சிங் பக்கா ஆகியோர் தலைமையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு இன்று பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டமானது, கடந்த வாரம் டெல்லி சட்டசபையில் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் குறித்து கெஜ்ரிவால் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றது.

திரைப்படம் குறித்து பாஜக தலைவர்களுக்கு அறிவுறுத்திய முதல்வர், இதை ஊக்குவிக்க வேண்டாம். பொய்யான படம் தொடர்பாக போஸ்டர்களையும் ஓட்ட வேண்டாம். காஷ்மீரி பண்டிட்களின் துன்பத்தைப் பயன்படுத்தி திரைப்பட தயாரிப்பாளர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள் என்றார்.

சிசோடியாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பாக்கா, “காஷ்மீரி இந்துக்கள் அவமானப்படுத்தப்படுவதை எதிர்ப்பது சமூக விரோதி என்று கூறப்பட்டால், அவர்கள் சமூக விரோதிகள் தான்.

காஷ்மீரி இந்துக்களின் இனப்படுகொலை குறித்த கெஜ்ரிவாலின் அறிக்கைக்கு மன்னிப்பு கோர சொல்பவர்கள் சமூக விரோதி என்பதற்கு சமம் என்றால், ஆம், நாங்கள் சமூக விரோதிகள் தான் என பதிவிட்டிருந்தார். மேலும், தாங்கள் எந்த விதமான தாக்குதலிலும் ஈடுபடவில்லை என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து டெல்லி வடக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சாகர் சிங் கல்சி கூறுகையில், “காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் குறித்து முதல்வர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலை 11.30 மணியளவில் ஐபி கல்லூரி அருகே உள்ள லிங்க் ரோட்டில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு வெளியே பாஜக யுவ மோர்ச்சா அமைப்பை சேர்ந்த 150 முதல் 200 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் 1 மணியளவில், போராட்டக்காரர்களில் சிலர் இரண்டு தடுப்பை தாண்டு, முதல்வர் வீட்டு வாசலுக்கு வந்து, கண்டன முழக்கங்களை எழுப்பினர். அவர்கள் கையில் சிறிய அளவிலான பெயிண்ட் பாக்ஸ் இருந்தது. அதிலிருந்த பெயிண்டை முதல்வர் வீட்டு கேட்டின் மீது வீசினர். அப்போது, ஒரு பூம் தடுப்பும், சிசிடிவி கேமராவும் சேதமடைந்ததை கவனித்தோம்.

உடனடியாக அந்நபர்களை அங்கிருந்து அப்புறுத்திவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட 70 நபர்களை கைது செய்தோம். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.