டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பாஜக-ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் கடும் மோதல்

புதுடெல்லி:
தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் தொடர்பாகவும் காஷ்மீர் பண்டிட்டுகள் தொடர்பாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டசபையில் கூறிய கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று பாஜகவினர் கெஜ்ரிவால் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். 
இந்நிலையில் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக தலைவர் கூறிய கருத்து, பாஜக தலைமையிலான டெல்லி கிழக்கு மாநகராட்சி கூட்டத்தில் எதிரொலித்தது. 
1970களில் ஒருங்கிணைந்த மாநகராட்சியாக இருந்தபோது, நிலைக்குழு தலைவராக இருந்த ஈஸ்வரி தாஸ் மகாஜன் மறைவுக்கு மாநகராட்சி கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர், அவைத் தலைவர் சத்யபால் சிங் மற்றும் பிற பாஜக கவுன்சிலர்களுக்கு எதிராக ஆம் ஆத்மி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். பதிலுக்கு பாஜக உறுப்பினர்களும் குரல் கொடுக்க, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 
கவுன்சிலர்கள் ஒருவரையொருவர் நெட்டித்தள்ளியதுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன், நடத்தை விதிகள் மற்றும் சபையின் புனிதத்தன்மையை மீறுவதாக இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டினர்.
இதனால் சுமார் ஒரு மணி நேரம் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. மோதலில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் வெளியேற்றப்பட்டபின்னர் அவை தொடர்ந்து நடைபெற்றது.
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் மற்றும் காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சுற்றியுள்ள பிரச்சனைகளின் பின்னணியில் டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா, சமீபத்தில் முதல்வர் கெஜ்ரிவால் குறித்து தவறாகப் பேசியதாக ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
ஆனால், கெஜ்ரிவால் பற்றி மற்றவர்கள் கூறியதை மட்டுமே குப்தா மேற்கோள் காட்டியதாகவும், அது அவரது கருத்து அல்ல என்றும் நிலைக்குழு தலைவர் பன்வார் கூறினார். ஆம் ஆத்மி உறுப்பினர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், எங்கள் கவுன்சிலர்களும் தற்காப்புக்காக பதிலடி கொடுத்தனர் என்றும் அவர் கூறினார்.
இதுபற்றி ஆம் ஆத்மி கவுன்சிலரும் எதிர்க்கட்சித் தலைவருமான மனோஜ் குமார் தியாகி கூறுகையில்,  பாஜக உறுப்பினர்கள் உடல் பலத்தை பிரயோகப்படுத்தியதாகவும், தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும், பெண்கள் உட்பட பல ஆம் ஆத்மி உறுப்பினர்களிடம் முரட்டுத்தனமாக தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.