சதுரங்கவேட்டை சினிமா படபாணியில் தொழிலதிபரிடம் ஐம்பொன் என்று கூறி கல் விநாயகர் சிலையை விற்க முயற்சி

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவர் அவரது மகளை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த மந்திரவாதி அப்பா சேட் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். அப்பாசேட் அவ்வப்போது தாராபுத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது கருப்பையா அவரது வீட்டில் அரை அடி உயரமுள்ள கல் விநாயகர் சிலை ஒன்றை பூஜை அறையில் வைத்து பூஜை செய்து வந்ததை பார்த்துள்ளார்.

இதையடுத்து அப்பாசேட், மாமனார் கருப்பையாவிடம், இந்த சிலையில் ரசாயனத்தை பூசி, பசும்பாலை ஊற்றினால் பால் பச்சை நிறமாக மாறும். அந்த பாலை பருகினால் உடலில் உள்ள அனைத்து வியாதிகளும் தீரும் என கூறினார்.

இதனை கேட்ட கருப்பையா அந்த சிலையை அப்பாசேட்டிடம் கொடுத்து அதன்மீது ரசாயனம் பூசி திரும்பக் கொண்டுவந்து கொடுக்குமாறு கூறினார். அதன்படி அந்த சிலையை வாங்கி சென்ற அப்பாசேட் அதன் மீது ரசாயனத்தை தடவி மாமனாரிடம் கொண்டு வந்து கொடுத்தார். அதன்பின்னர் இருவரும் அந்த சிலை மீது பசும்பாலை ஊற்றினர். அப்போது அந்த பால் பச்சை நிறமாக மாறியது.

இதையடுத்து அந்த சிலையை விற்றால் அதிகமாக சம்பாதிக்கலாம் என முடிவு செய்து அந்த சிலையை விற்பனை செய்ய முடிவு செய்தனர். அதன்படி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஓட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ராஜா என்பவரை அழைத்து வந்து அந்த சிலையின் மகிமை குறித்தும் ஐம்பொன் சிலை என்றும் கூறினர்.

ஆனால் ராஜாவுக்கு சிலை மீது சந்தேகம் ஏற்பட்டது. இருப்பினும் ராஜாவை ஏமாற்றி அவரிடம் அந்த சிலையை ரூ.13 லட்சத்திற்கு விற்க கருப்பையாவும், அப்பாசேட்டுவும் முயற்சித்தனர்.

இருப்பினும் சுதாரித்துக்கொண்ட ராஜா, அந்த சிலை தனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு தாராபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் கருப்பையா வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர்.

போலீஸ் வருவதை அறிந்த கருப்பையா தப்பி ஓடிவிட்டார். மந்திரவாதி அப்பா சேட் மட்டும் அங்கு இருந்தார். அவரை கைது செய்த போலீசார் விநாயகர் சிலையை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கருப்பையாவை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்த சிலையை போலீசார் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

சதுரங்கவேட்டை சினிமா படத்தில் பல்வேறு விதங்களில் பொதுமக்கள், தொழிலதிபர்களை ஏமாற்றி பண மோசடி செய்யும் சம்பவங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அதே பாணியில் தாராபுரத்தில் தொழிலதிபரிடம் மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.