தி.மு.க. சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் – செங்கல்பட்டில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை:
தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர்கள் திருச்சி சிவா, திண்டுக்கல் ஐ.லியோனி, சபாபதி மோகன் ஆகியோர் இணைந்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த மாதம் 18-ம் தேதி அன்று தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்த அரசு ஊழியர், ஆசிரியர், மாணவர், மகளிர், கழனியில் பாடுபடும் உழவர், ஆலையில் உழைக்கும் தொழிலாளி, வேலைவாய்ப்பில்லாதோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் நலன் பேணும் நிதிநிலை அறிக்கையின் சிறப்புகளையும், மக்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் சீர்மிகு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்திடும் வகையிலும், நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் வரலாறு காணாத பெருவெற்றியை தி.மு.க.வுக்கு வழங்கிய வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், தமிழகத்தில் உள்ள 77 கழக மாவட்டங்களில் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.
அந்தந்த மாவட்ட செயலாளர் – பொறுப்பாளர்கள் தலைமையிலும், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையிலும் நடைபெறும் இப்பொதுக்கூட்டங்களை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்று சிறப்புற நடத்திட வேண்டும்.
அதன்படி, வரும் 10-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
9-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம்- அமைச்சர் துரைமுருகன், கும்பகோணம்- டி.ஆர்.பாலு எம்.பி., திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம்- கே.என்.நேரு, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர்- அமைச்சர் ஐ.பெரியசாமி, சென்னை மாதவரம்- அமைச்சர் பொன்முடி, பொன்னேரி – ஆர்.எஸ்.பாரதி, சென்னை ராயபுரம்- கனிமொழி எம்.பி., மயிலாப்பூர்- உதயநிதி ஸ்டாலின், எம்.எம்.அப்துல்லா எம்.பி.,
சோழிங்கநல்லூர்- தயாநிதிமாறன் எம்.பி. உள்ளிட்டோர் பேசுகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.