12-ம் வகுப்பு கணித பாட வினாத்தாள் கசிந்த விவகாரம்- புதிய வினாத்தாளை கொண்டு இன்று தேர்வை நடத்த நடவடிக்கை

சென்னை:
கொரோனா தொற்று காரணமாக பொதுத் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுவதற்கு 2 கட்டங்களாக திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்று கல்வித் துறை அறிவித்தது. 
அதன்படி, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்ட திருப்புதல் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று முடிந்தது.
அந்த தேர்வில் சில வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. 
இதுதொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் மீது போலீசில் புகாரும் கொடுக்கப்பட்டது.
வினாத்தாள்கள் முன் கூட்டியே வெளியான சம்பவத்தை தொடர்ந்து, திருப்புதல் தேர்வு மதிப்பெண் முக்கியமாக கருதப்படாது என்றும், பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகுவதற்கு அடித்தளமாக மட்டுமே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது என்றும் கல்வித்துறை அறிவித்தது.
மேலும் 2-ம் கட்ட திருப்புதல் தேர்வில் இதுபோன்ற சம்பவங்களுக்கு எதுவும் இடம் கொடுத்துவிடக்கூடாது. அதில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளை அறிவுறுத்தி இருந்தனர். 
இந்த நிலையில், முதற்கட்ட திருப்புதல் தேர்வை போல, 2-ம் கட்ட திருப்புதல் தேர்வில் இன்று நடக்க இருந்த 12-ம் வகுப்பு கணித தேர்வுக்கான 2 வகையான வினாத்தாள்களும் நேற்று முன்கூட்டியே சமூக வலைதளங்களில கசிந்தன. 
பாதுகாப்பான நடவடிக்கைகள் மேற்கொண்டும் எப்படி வினாத்தாள் வெளியானது? என்று கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் புதிய வினாத்தாள் நேற்று இரவோடு இரவாக தயாரிக்கப்பட்டது. அனைத்து பள்ளிகளுக்கும் 12-ம் வகுப்பு கணிதப்பாட வினாத்தாள் மின்னஞ்சல் வாயிலாக இன்று காலை அனுப்பி வைக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திடம் இருந்து பள்ளிகளுக்கு வாட்ஸ்-அப் மூலம் இதற்கான தகவல் அனுப்பப்பட்டு இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.