மருத்துவக் கல்வி; அனைத்து சுற்று கலந்தாய்வுகளையும் அரசே நடத்த வேண்டும்: அன்புமணி

சென்னை: தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் இடங்கள் நிரப்புவதில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க அனைத்து சுற்று கலந்தாய்வுகளையும் அரசே நேரடியாக நடத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருந்த 147 எம்.பி.பி.எஸ் இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வை சம்பந்தப்பட்ட கல்லூரிகளே நடத்திக் கொள்ள அனுமதித்ததன் விளைவாக, அந்த இடங்கள் எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் நிரப்பப்பட்டிருக்கின்றன. மருத்துவப் படிப்புகளில் சேர மாணவர்களிடம் கடும் போட்டி நிலவும் சூழலில், மாணவர் சேர்க்கையை வெளிப்படைத் தன்மை இல்லாமல் தனியார் கல்லூரிகளே நடத்த அனுமதிப்பது சமூக நீதிக்கு வலிமை சேர்க்காது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக இதுவரை மொத்தம் மூன்று சுற்று கலந்தாய்வுகள் நடத்தப்பட்டன. அவற்றில் நிரப்பப்படாமல் எஞ்சியிருக்கும் 147 இடங்களை நிரப்புவதற்கான எஞ்சிய சுற்று (Stray Round) கலந்தாய்வை, சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்களே நிரப்பிக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு நேற்று பிற்பகலில் அறிவித்தது. 12 மணி நேரத்திற்குள் அனைத்து கலந்தாய்வு நடைமுறைகளையும் முடித்து நள்ளிரவுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியலை மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆணையிட்டது. இதில் அரசின் கண்காணிப்பு எதுவும் இல்லாததால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்களின் விருப்பம் போல காலியிடங்களை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் கடந்த ஆண்டு வரை அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களையும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையும் தமிழக அரசே நேரடியாக நிரப்பியது. ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதில் மூன்றாவது சுற்றாக மாப்-அப் (Mop-up) கலந்தாய்வும், நான்காவதாக எஞ்சிய சுற்று கலந்தாய்வும் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, மாநில அளவிலான கலந்தாய்வுக்கும் தேசிய மருத்துவ ஆணையம் நீடித்தது தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். இவற்றில் எஞ்சிய சுற்று கலந்தாய்வை தனியார் கல்லூரிகளே நடத்திக் கொள்ள அனுமதிக்கப்படும் வரை அதில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்கவே முடியாது.

தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு விழிப்புடன் செயல்பட்டிருந்தால் முறைகேடுகளை தவிர்த்திருக்க முடியும்; எஞ்சிய சுற்று கலந்தாய்வுக்கே தேவையில்லாமல் கூட தடுத்திருக்க முடியும். ஆனால், தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழுவும் தெரிந்தோ, தெரியாமலோ இத்தவறுக்கு துணை போயிருக்கிறது. தமிழகத்தில் முதல் இரு சுற்றுகள் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்ட பிறகு 255 இடங்கள் காலியாக இருந்ததால் அவற்றை நிரப்புவதற்கு மாப்&அப் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதை தமிழக அரசே நடத்தியது. இதில் 255 இடங்களும் நிரப்பப்பட்டன. ஆனால், அவர்களில் 108 பேரை தவிர மீதமுள்ள 147 பேர் கல்லூரிகளில் சேராததால் தான் எஞ்சிய சுற்று கலந்தாய்வு நடத்தப்பட்டது.

எஞ்சிய சுற்று கலந்தாய்வை நேற்று நடத்த ஆணையிட்ட மருத்துவக் கலந்தாய்வுக்குழு, அதற்கான அறிவிப்பையும், அதில் பங்கேற்க தகுதி படைத்த மாணவர்கள் பட்டியலையும், எந்தெந்த கல்லூரிகளில் எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்ற விவரத்தையும் வெளிப்படையாக பொது வெளியில் வெளியிட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் எஞ்சிய சுற்று கலந்தாய்வில் பங்கேற்க தகுதி படைத்த மாணவர்களுக்காவது இந்த விவரங்களை மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழுவோ அல்லது அந்த கலந்தாய்வை நடத்தும் சம்பந்தப்பட்ட கல்லூரிகளோ தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், யாருக்கும், எந்த விவரங்களும் தெரிவிக்கப்படாமல் கலந்தாய்வு எப்படி நடத்தப்பட்டது? என்பதை தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு தான் தமிழ்நாட்டு மக்களுக்கும், மாணவர்களுக்கும் விளக்க வேண்டும்.

எஞ்சிய சுற்று கலந்தாய்வு மாய உலகில் நடந்ததால், தனியார் கல்லூரிகள் சில மாணவர்களுடன் ஏற்கனவே செய்து கொண்டிருந்த ஒப்பந்தப்படி, அவர்களுக்கு இடங்களை ஒதுக்கி விட்டன என்ற குற்றச்சாட்டை புறக்கணித்து விட முடியாது. தனியார் கல்லூரிகளில் இருந்த 17 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் இதே முறையில் நிரப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் தகுதியுடைய மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப் பட்டிருக்கக்கூடும். தனியார் கல்லூரிகள் அவற்றின் விருப்பப்படி இடங்களை நிரப்பிக் கொள்வதற்காகவே எஞ்சிய சுற்று கலந்தாய்வு மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டதோ? என்ற ஐயத்தில் அர்த்தம் இருக்கிறது.

அதேபோல், மாப்&அப் சுற்றுக்கு ஒதுக்கப்படும் இடங்களை எஞ்சிய சுற்றுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே, அந்த சுற்றில் இடங்களை தேர்வு செய்து கல்லூரிகளில் சேராமல் இருக்கும் ஏற்பாட்டை சில தனியார் கல்லூரிகள் செய்கின்றன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் சேர்க்கையில் நடத்தப்பட்டு வந்த இத்தகைய செயல்கள் இப்போது மாநில அளவிலான கலந்தாய்வுக்கும் நீட்டிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. எதிர்காலத்தில் இது அதிக முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்.

இனிவரும் காலங்களில் இத்தகைய முறைகேடுகள் நடப்பதை தடுக்க வேண்டுமானால், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களுக்கும் தமிழக அரசே, ஆன்லைனில் இல்லாமல், நேரடியாக கலந்தாய்வை நடத்த வேண்டும். அதுமட்டுமின்றி, அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் முதல் இரு சுற்று கலந்தாய்வுகளில் நிரப்பப்படாமல் உள்ள தமிழக கல்லூரிகளின் இடங்களை திரும்பப் பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.