விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு கஞ்சாவை திரவமாக மாற்றி கடத்த முயற்சி: சென்னையை சேர்ந்தவர்கள் உட்பட 4 பேர் கைது

திருமலை: விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு கஞ்சாவை திரவ வடிவில் மாற்றி கடத்த முயன்ற சென்னையை சேர் ந்த 2 பேர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பதி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் அனந்தபூர் சரக டிஐஜி  ரவிபிரகாஷ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடத்தல்காரர்கள் புதிய முறையில் கஞ்சாவை திரவமாக்கி  கடத்த ஆரம்பித்துள்ளனர். புத்தூர்  டிஎஸ்பி யஷ்வந்த் மற்றும் போலீசார் புத்தூர் சர்ச் வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தேகப்படி நின்றிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் அனந்தபுரை சேர்ந்த ஜானுகுண்டமோகன், அஜய்குமார், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துகோட்டையை சேர்ந்த பிரசாந்த், சென்னை மாதவரத்தை சேர்ந்த லோகேஷ் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.7.17 லட்சம் 1.435 கிலோ திரவ கஞ்சா, ரூ.2 லட்சம் மதிப்புள்ள பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தொடர்ந்து நடத்திய விசாரணையில், விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு திரவ கஞ்சாவை கடத்தி, அங்கிருந்து மற்ற இடங்களுக்கு விற்க வந்துள்ளனர். காவலராக பணிபுரிந்து வந்த ஜானுகுண்டா மோகன் கஞ்சா கடத்தியதாக கைது செய்து சஸ்பெண்ட் செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வந்த பின் மீண்டும் அதேதொழிலை செய்து வந்துள்ளார். போலீசார் கண்காணிப்பு அதிகரித்துள்ளதால் கஞ்சா கடத்தலில் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க கஞ்சாவை திரவ வடிவில் மாற்றி கடத்தியுள்ளனர். புத்தூரில் அஜய்குமார், பிரசாந்த் மற்றும் லோகேஷ் ஆகியோருக்கு திரவ கஞ்சாவை ஜானுகுண்டா மோகன் விற்றபோது போலீசார் கைது செய்தனர். இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாமல் இருக்க  பெற்றோர்கள் தொடர்ந்து  கண்காணிக்க வேண்டும்.  நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி தவறான பாதைக்கு செல்கின்றனர். கல்லூரி பருவத்திலிருந்தே போதைக்கு அடிமையானவர்கள் தங்கள் வாழ்க்கையை இருளாக்கி கொண்டிருக்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.