'Full' பாதுகாப்பு: இனி யாரும் ஆன்லைன் மோசடியில் ஏமாறமாட்டார்கள்?' – RBI-ன் புதிய முயற்சி

தொழில்நுட்பம் அப்டேட் ஆக… ஆக, இன்னொரு பக்கம், ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும், வகைகளும் நீண்டுகொண்டே போகின்றன.

இந்த மோசடிகளுக்குப் பெரியவர்கள், சிறியவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என எந்த வித்தியாசமும் இல்லை.

ஓய்வுப்பெற்ற அரசு அதிகாரிகள் முதல் சிட்டிங் எம்.பி வரை டிஜிட்டல் அரஸ்ட் போன்கால் வருகின்றன…வந்திருக்கின்றன. ஐ.டியில் வேலைபார்க்கும் ஜென் Z கிட்ஸ்களுக்குக் கூட, ‘பொருள் டெலிவரி செய்ய வந்துருக்கோம்… OTP சொல்லுங்க’ என்று வகை வகையாக மோசடிகள் நடந்துகொண்….டே இருக்கின்றன.

இந்த மோசடிகளுக்கு ஃபுல் ஸ்டாப் வைக்க இந்திய ரிசர்வ் வங்கி சில பரிந்துரைகளை முன்னெடுத்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி | RBI
இந்திய ரிசர்வ் வங்கி | RBI

ஆன்லைன் மோசடி ஒன்று நடந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அதை சில நிமிடங்களிலேயே கண்டுபிடித்திருப்போம்.

ஆனால், பணம் ஏற்கெனவே மோசடி பேர்வழியின் வங்கிக் கணக்கிற்குச் சென்றுவிட்டதால், அடுத்து ஒன்றும் செய்ய முடியாது. வங்கிகளை நாடினாலும், பணம் மோசடி பேர்வழியின் வங்கிக் கணக்கில் இருந்தால் மட்டும் தான், அந்தப் பணத்தை ஃப்ரீஸ் செய்ய முடியும்.

இதற்கும், வங்கியை மோசடி நடந்த இரண்டு மணிநேரத்திற்குள் தொடர்புகொள்ள வேண்டும். இது பெரிய நடைமுறை. பதற்றத்தில் பலராலும் அத்தனை நடைமுறையையும் செய்து முடிக்க முடியாது.

அதனால், இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறைப்படி,

ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபருக்கு பணம் பரிவர்த்தனை செய்யும்போது, அந்தப் பணம் பெறுநரின் வங்கிக்கணக்கில் சென்று சேர 1 மணி நேரம் ஆகும்.

அந்த 1 மணிநேரத்திற்குள், மோசடி கண்டுபிடிக்கப்பட்டால், பணம் பரிவர்த்தனை ஆகாமல் தடுத்துவிடும். இது ரூ.10,000-க்கு மேலான பணப்பரிவர்த்தனைகளுக்கே பொருந்தும்.

மோசடிகளில் பெறப்படும் பணம் பெரும்பாலும் தனிநபரின் வங்கிக் கணக்கில் தான் பெறப்படும். அதற்கு தான், இந்தச் செக்.

இது நெட் பேங்கிங், RTGS, IMPS, NEFT, வாலட் பேங்கிங் ஆகியவற்றிற்கும் பொருந்தும்.

பரிவர்த்தனை
பரிவர்த்தனை

அடுத்து,

ஒருவேளை, நாம் ஒருவருக்கு பணம் அனுப்புகிறோம் என்று வைத்துக்கொள்வோம். வங்கி அந்தப் பண பரிவர்த்தனையைச் சந்தேகப்பட்டால், நம்மிடம் மீண்டும் ‘Confirmation’-ஐ கேட்கும்.

நாம், ‘ஓகே’ கொடுத்தப் பின் தான், பெறுநரின் வங்கிக் கணக்கிற்கு அந்தப் பணம் செல்லும்.

ஒவ்வொரு முறை, ஒருவருக்கு பணம் அனுப்பும் போதும், 1 மணிநேரம் கழித்து தான் பணம் செல்லும் என்றால், அது மிகவும் சிரமம். அதனால், வழக்கமாக பணம் அனுப்புகிற நபரை நாம் ‘Whitelist’ செய்துகொள்ளலாம். அதனால், அந்த நபருக்குப் பணம் சென்று சேர்வதில் தாமதம் இருக்காது.

கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் போன்ற பிசினஸ் வங்கிக் கணக்குகளுக்குச் செல்லும் பரிவர்த்தனையில் இந்தப் பரிந்துரைப்படி தாமதமாகாது.

முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் செய்யும் பரிவர்த்தனைகளில், இடையில், ‘நம்பகமான நபர்’ என்று ஒருவர் இருப்பார். முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் ரூ.50,000-க்கு மேல் பண பரிவர்த்தனை செய்யும் போது, நம்பகமான நபரின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே, அந்தப் பரிவர்த்தனை முழுமையாக முடியும்.

இந்த நம்பகமான நபரை மாற்ற வேண்டுமானாலும், நபர் மாற 24 மணிநேரம் எடுக்கும். இதுவும் மோசடியைத் தடுப்பதற்கான ஒரு வழி தான்.

இந்திய ரிசர்வ் வங்கியின் இந்தப் பரிந்துரை நடைமுறைக்கு வந்தால், மோசடிகள் தடுக்கப்படுமா? – நீங்க என்ன நினைக்கிறீங்க? கமென்ட்டில் பதிவிடுங்கள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.