திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் ‘லிவ்-இன்’ உறவு முறையால் விபசாரம் அதிகரிக்கும்! – 2 முறை கருவை கலைத்த பெண் வழக்கில் ஐகோர்ட் கருத்து

இந்தூர்: திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் ‘லிவ்-இன்’ உறவு முறையால் விபசாரம் மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும் என்று 2 முறை கருவை கலைத்த பெண் வழக்கில் மத்திய பிரதேச ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரும், அதே பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவரும் நண்பர்களாக பழகி பின்னர் காதலித்து வந்தனர். இருவரும் ஒருநாள் தனிமையில் சந்தோசமாக இருந்துள்ளனர். இதனால் அந்தப் பெண் கர்ப்பமானார். பின்னர் அந்த கருவை கலைத்துவிட்டார். இதையறிந்த பெற்றோர், அந்தப் பெண்ணுக்கு வேறொரு ஆணுடன் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தனர். அதிர்ச்சியடைந்த அந்த இளைஞன் தனது காதலிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். அதையடுத்து இவ்விவகாரம் காவல் நிலையத்திற்கு சென்றது. அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் கொடுத்த புகாரின்படி, போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர். அவர் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். அம்மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதி சுபோத் அபியங்கர், ‘இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் இரண்டு முறைக்கு மேல் கர்ப்பமானதாகவும், தனக்கு கொடுத்த  அழுத்தத்தின் காரணமாக கருவைக் கலைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார். இருவருக்கும் உள்ள உறவு முறிந்தபின்னர், ​அந்தப் பெண்ணை குற்றம்சாட்டப்பட்டவர் மிரட்டி அச்சுறுத்தி உள்ளார். அந்த பெண்ணின் வீட்டாருக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி உள்ளார். மேலும், அந்த பெண்ணை தன்னிடம் ஒப்படைக்கவில்ைல என்றால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி உள்ளார்.ஒருவேளை தான் தற்கொலை செய்து கொண்டால், அந்த  பெண்ணின் குடும்பத்தினர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று மிரட்டி  உள்ளார். இவரின் மிரட்டல்களால் அந்தப் பெண்ணுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் நின்று போனது. அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட உரிமைகளை பயன்படுத்திக் கொண்டு, திருமணம் ஆகாமல் ‘லிவ்-இன்-ரிலேஷன்ஷிப்’ என்ற பெயரில் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்கின்றனர். இதனால் பாலியல் குற்றங்கள்  மற்றும் விபசாரங்கள் அதிகரித்து வருகிறது. இந்த வழக்கை பொருத்தமட்டில் ‘​​லிவ்-இன்-ரிலேஷன்ஷிப்’ முறையில் இருவரும் பழகியுள்ளதை நீதிமன்றம் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்திய சமூகத்தின் நெறிமுறைகளை இருவரும் கடைபிடிக்கவில்லை. தனிமனித சுதந்திரம் குறித்து நீதிமன்றம் அதிக அக்கறை கொண்டுள்ளது. அதேநேரம் இதுபோன்ற காம நடத்தையை ஊக்குவிப்பதால் அவை பாலியல் குற்றங்களுக்கும், விபசாரத்திற்கும் வழிவகுக்கும்’ என்று கூறி அந்த இளைஞரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.