நிலக்கரி பற்றாகுறையால் 8 மணி நேரம் மின்வெட்டு 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம்: மாநில தொகுப்புக்கு ஒன்றிய அரசு வழங்காததால் தட்டுப்பாடு

புதுடெல்லி: நாடு முழுவதும் நிலவும் நிலக்கரி பற்றாக்குறையால் 8 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  வெயில் காலம் வந்தாலே, மின்வெட்டு என்ற வார்த்தை நாடு முழுவதும் மக்கள் வாட்டி வதைத்து வருகிறது. மின்சார உற்பத்தியில் அனல் மின் நிலையங்களையே அதிகம்  சார்ந்துள்ள இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நிலக்கரி தட்டுப்பாடும், அதனால்  ஏற்படும் மின்வெட்டும் வாடிக்கையான விஷயமாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் ஒன்றிய அரசின்  மின்சாரம், நிலக்கரி மற்றும் ரயில்வே ஆகிய மூன்று துறைகளுக்கு இடையே போதிய  ஒத்துழைப்பு இல்லாததேதான் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவின் ஒட்டு மொத்த மின்தேவையில் 53 சதவீதம் அனல்மின்  நிலையங்களே தரும் நிலையில், தற்போது நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு மின்சார  உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், சட்டீஸ்கர்,  கர்நாடகா, ஆந்திரா, அரியானா, பீகார், ஜார்க்கண்ட், தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம்  ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 178 அனல் மின் நிலையங்களில்  100 அனல்மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு மிக மோசமான நிலையில்  உள்ளது. ஒட்டு மொத்தமாக 6.7 கோடி டன் நிலக்கரி கையிருப்பில் இருக்க வேண்டும். ஆனால், இப்போது கையில் இருப்பதோ வெறும் 2.3 கோடி டன் மட்டுமே. இதனால், தூத்துக்குடி உட்பட நாட்டின் பல்வேறு அனல்மின் நிலையங்கள் நிலக்கரி  பற்றாக்குறையால் தடுமாறுகின்றன. நிலக்கரி தட்டுப்பாட்டால் மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டிய நிலக்கரி தொகுப்பை ஒன்றிய அரசு சில மாநிலங்களுக்கு நிறுத்தி விட்டதாகவும், சில மாநிலங்களுக்கு குறைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. சட்டீஸ்கரில் உள்ள பல அனல்மின் நிலையங்களுக்கு  நிலக்கரி சப்ளையை ஒன்றிய அரசு நிறுத்தி விட்டது என்று அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் குற்றம்சாட்டி உள்ளார். குஜராத், ஆந்திரா மாநிலங்களில் கடும் மின்பாற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பல மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. இரு மாநிலங்களில் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் 40 சதவீதத்துக்கு மேல் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆந்திராவில் தொழிற்சாலைகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. மின்வெட்டு காரணமாக மருத்துவமனைகளில் டார்ச் வெளிச்சம் அல்லது மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கிராமங்களில் 5 முதல் 6 மணி நேரம் மின்தடையும், நகர் பகுதிகளில் 1 முதல் 2 மணி நேரம் மின் தடையும் உள்ளது. மின்பற்றாக்குறை தொடர்ந்தால், வரும் காலங்களில் இந்த நிலை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இதேபோல் டெல்லி, அரியானா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மின் உற்பத்தி பாற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் நாட்டின் பல மாநிலங்களில் 8 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால், மக்கள் கடுமையாக அவதிப்பட்டுள்ளனர்.  ரூ.2.7 லட்சம் கோடி பொருளாதாரம் காலிநாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பல மணி நேரம் மின்தடை காரணமாக தொழிற்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி முடங்கி உள்ளது. நாட்டில் தற்போது நிலவும் மின்சார நெருக்கடி ஆசியாவின்  மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவை உலுக்கி உள்ளது. இதனால், 2.7 லட்சம் கோடி பொருளாதாரம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மின்சாரம் நெருக்கடி காரணமாக நிலக்கரி இருப்பு, தேவை குறித்து, ஒன்றிய மின்சாரத்துறை அமைச்சர்  ஆர்.கே.சிங், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷணவ், நிலக்கரி அமைச்சர் பிரகலாத்  ஜோஷி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன்   ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள நிலக்கரி பற்றாக்குறைக்கு ஒன்றிய அமைச்சகங்களுக்கு இடையே போதிய ஒத்துழைப்பு இல்லாதது முக்கிய காரணம் என்று குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் அதை உறுதிப்படுத்தி உள்ளது.120 ஆண்டுக்கு பின்42.4 டிகிரி வெயில் கோடை காலம் என்றால் மே மாதங்களில்தான் அக்னி நட்சத்திரம் ஏற்படும்போது வெயில் கடுமையாக இருக்கும். ஆனால், 120 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் மாதத்திலேயே தலைநகர் டெல்லியில் 108.3 டிகிரி பாரன்ஹீட் (42.4 டிகிரி  செல்சியஸ்) பதிவாகி உள்ளது. இதனால் மே மாதங்களில் இதை விட வெயில் கொளுத்தலாம் என்று கூறப்படுகிறது.  வெயில் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க மின்தேவையும் அதிகரிக்கிறது. எனவே, மிகவும் நெருக்கடி நிலை ஏற்படும் முன்பே ஒன்றிய அரசு நிலக்கரி பற்றாக்குறையை நீக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பற்றாக்குறை ஏன்? நிலக்கரி பற்றாக்குறைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் சில…* கடந்த செப்டம்பரில் பெய்த மழையால் நிலக்கரி சுரங்கத்தில் வெள்ளம் புகுந்தது. இதனால், உற்பத்தி பாதித்தது.* கோடை காலம் தொடங்கி விட்டதால் மின்சார தேவை பன்மடங்கு அதிகரித்து வருகிறது.* வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை பன்மடங்கு அதிகமாகி விட்டதால், இறக்குமதிக்கு ஏற்படும் கூடுதல் செலவு.* பருவமழை காலத்தில் நிலக்கரியை சேமிக்க தவறியது ஒன்றிய அரசு.* நிலக்கரியை ரயில்கள்  மூலம் அனல்மின் நிலையங்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அலட்சியம் காட்டியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.