வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சல்பியூரிக் அமில மேகங்கள் சூழ்ந்து மிகவும் வெப்பமான கிரகமாக காணப்படும் வெள்ளி கிரகத்திற்குள், என்ன என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய இஸ்ரோ விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
2024 டிசம்பரில் வெள்ளி கோளுக்கு விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளது. அப்போது வெள்ளி கோளும், பூமியும் மிகவும் நெருக்கமாக நேர்கோட்டில் அமைந்திருக்கும். அதனால் விண்கலத்தை குறைந்த அளவு உந்துசக்தியைப் பயன்படுத்தி வெள்ளி கோளின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடியும். இதே போன்ற அடுத்த வாய்ப்பு 2031ல் தான் கிடைக்கும்.
வெள்ளி கோளுக்கான இந்த திட்டத்தில் அந்த கிரகத்தில் செயலில் உள்ள எரிமலைகள், வளிமண்டலத்தின் அமைப்பு, கலவை, விசை ஆகியவை ஆய்வு செய்யப்படும். வெள்ளியின் அயனியாக்கப்பட்ட வளிமண்டலத்தில் சூரிய துகள்களின் செயல்பாடு போன்றவற்றை ஆராய்வர்.

இந்நிலையில் வெள்ளிக் கிரகம் பற்றிய கருத்தரங்கில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் சோம்நாத், இத்திட்டம் பற்றி மேலும் கூறியதாவது: வெள்ளி கிரகத்திற்கான திட்டம் உருவாகியுள்ளது. திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதற்கான நிதி அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தியாவிடம் இன்றைக்கு இருக்கும் திறனால் வெள்ளி கிரகத்திற்கான விண்கலனை உருவாக்கி அதனை வெள்ளியின் வட்டப்பாதையில் நிலைநிறுத்த முடியும். அதனை மிகக் குறுகிய காலத்தில் செய்யும் திறன் இந்தியாவிடம் உள்ளது, என கூறினார்.
Advertisement