ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் சமீபத்தில் காவல்நிலையத்தில் அளித்திருந்த புகார் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த புகாரில், சிறுமியின் தாய் பணத்துக்காகத் தனியார் மருத்துவமனைகளில் தன்னுடைய கருமுட்டையை விற்பனை செய்ததாகவும், தன் தாயின் இரண்டாவது கணவர் தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமி குறிப்பிட்டிருந்தார். சிறுமியின் இந்த புகாரையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

சிறுமியின் புகாரின்படி, அவரின் தாய் இந்திராணி, வளர்ப்புத் தந்தை சையது அலி, இடைத்தரகர் மாலதி, அந்த சிறுமியின் ஆதார் அட்டையை மாற்றிக்கொடுத்த ஜான் ஆகியோரை போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். 16 வயது சிறுமியிடமிருந்து இதுவரை எட்டு முறை கருமுட்டை எடுக்கப்பட்டிருக்கிறது. கருமுட்டை விற்பனையில் இந்திராணி, மாலதி ஆகிய இருவரும் ஏற்கெனவே ஈடுபட்டுவந்த நிலையில், இந்திராணி தன் மகளையும் இந்த கொடுமைக்கு ஆளாக்கியிருகிறார்.
சிறுமியின் தாய் கைதுசெய்யப்பட்ட நிலையில், சிறுமி மனநல ஆலோசனை வழங்கப்பட்டு அரசு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார். காப்பகத்தில் உள்ள சிறுமியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த சிறுமி தனக்கு என்ன நடந்தது, எங்கெல்லாம் அழைத்துச் செல்லப்பட்டார் என அனைத்து விவரங்களையும் தெரிவித்திருக்கிறார். அரசு சார்பில், ஈரோடு பகுதியில் உள்ள தனியார் கருத்தரித்தல் மருத்துவமனைகளில் சட்டவிரோதமாகக் கருமுட்டை விற்பனை நடைபெறுகிறதா என்பதைக் கண்டறிய, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் விஸ்வநாதன் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
காப்பகத்தில் உள்ள சிறுமியிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிறுமி ஈரோடு, சேலம், ஓசூர் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும்… கேரளாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு முறையும் சிறுமியின் கருமுட்டைக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரின் தாயார் சிறுமியின் 13 வயதிலிருந்தே கருமுட்டையை விற்பனை செய்துவந்திருக்கிறார். அதற்காகவே சிறுமியின் வயதை ஆதார் அட்டையில் திருத்தம் செய்திருக்கிறார்.
சிறுமி அளித்த தகவல்களின் அடிப்படையில், ஈரோட்டில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் சுகாதாரத்துறை உயர்மட்டக் குழுவைச் சேர்ந்த ஏழு பேர் விசாரணை நடத்தினர். அந்த மருத்துவமனைகளில் பதிவேடு மற்றும் சிகிச்சை பெற்றவர்களின் விவரங்களைச் சேகரித்திருக்கின்றனர். ஈரோட்டைத் தொடர்ந்து சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் விசாரணை நடத்தப்பட்டது. அங்கிருந்த ஆவணங்களையும் அதிகாரிகள் சேகரித்திருக்கின்றனர். மேலும், சிறுமி கூறியதை வைத்து மற்ற மருத்துவமனைகளுக்கும் சென்று ஆய்வு நடத்தப்படும் என்றும், சேலத்தில் ஆய்வு முடிவடைந்திருக்கும் நிலையில், அடுத்ததாக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் செல்ல இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு முடிவடைந்திருக்கும் நிலையில், தற்போது காவல்துறையினர் தங்கள் தரப்பு விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். இந்த விவகாரத்தில் விதிமுறைகளை யார் மீறியிருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விசாரணை முடிவில் தவறு செய்யப்பட்டது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். மனதளவிலும், உடலளவிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் அந்த சிறுமிக்கு உரிய நீதி கிடைக்கவேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்குக் கோரிக்கை வைக்கின்றனர்.