வீட்டிலேயே குட்டி விமானம் செய்துகுடும்பத்துடன் பறந்த கேரள இளைஞர்| Dinamalar

லண்டன்:பிரிட்டனில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த இளைஞர், கொரோனா ஊரடங்கின் போது வீட்டிலேயே உருவாக்கிய குட்டி விமானத்தில், குடும்பத்துடன் ஐரோப்பிய சுற்றுலா சென்று வந்துள்ளார்.

கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்தவர் அசோக் அலிசேரில் தமரக் ஷன், 38. இவர் அம்மாநில முன்னாள் எம்.எல்.ஏ., தமரக் ஷன்னின் மகன். இவர், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில், மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.

முதுநிலை பட்டப்படிப்பு பயில்வதற்காக, 2006ல் லண்டன் சென்றவர் தற்போது, ‘போர்டு’ கார் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர் விமானம் ஓட்டும் பயிற்சி பெற்று, விமானிக்கான உரிமம் வைத்து உள்ளார். அவ்வப்போது தனி விமானத்தை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் பறப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கின் போது, வீட்டில் வைத்தே குட்டி விமானத்தை உருவாக்கினார்.

நான்கு பேர் அமர்ந்து பயணிக்கக் கூடிய இந்த விமானத்தில், ஜெர்மனி, ஆஸ்திரியா, செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளுக்கு குடும்பத்துடன் பயணம் செய்துள்ளார். இந்த விமானத்துக்கு, ‘ஜி தியா’ என பெயரிட்டுள்ளார். தியா என்பது இவரது இரண்டாவது மகளின் பெயர்.

இது குறித்து அசோக் கூறியதாவது:லண்டனில் நான்கு பேர் அமர்ந்து பயணிக்கக் கூடிய விமானங்கள் வாடகைக்கு கிடைப்பது அரிதாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும் மிக பழைய மாடலாக உள்ளது. இதன் காரணமாக தான் சுயமாக விமானம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினேன்.’ஸ்லிங் ஏர்கிராப்ட்’ என்ற விமானம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சென்று குட்டி விமானம் செய்வதற்கான உபகரணங்களை வாங்கினேன்.

‘ஸ்லிங் டி.எஸ்.ஐ.,’ என்ற மாடல் விமானத்தை வீட்டிலேயே தயாரித்தேன். இதற்கு 1.80 கோடி ரூபாய் செலவானது. கொரோனா ஊரடங்கின் போது நேரமும், பணமும் மிச்சமானதால் இதை செய்ய முடிந்தது.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.