அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மன நல ஆலோசகர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பள்ளி மாணவி மர்ம மரணம் குறித்து அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்து வருகிறது. நீதிபதி என்.சதீஷ்குமார், 3 அரசு மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மாணவியின் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.   இது குறித்த அறிக்கையைத்  தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

நேற்று இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது தமிழ்நாடு மாநில தலைமை குற்றவியல் அரசு வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா ஆஜரானார்.  அவர்,

”மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை முடிந்து, ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டுவிட்டது.  அது வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை ஆவணங்கள் ஆய்வுக்காகப் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட உள்ளன.

மாணவியின் மரணம், பள்ளி வளாகத்தில் நடந்த கலவரம் ஆகிய இரு வழக்குகளையும் தனித்தனியாக காவல்துறையினர் விசாரிக்கின்றனர். அவர்களுக்கு யாரையும் பாதுகாக்கும் எண்ணம் இல்லை.  பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடத்தப்பட்டு, அந்த பள்ளி மாணவர்களுக்குக் கடந்த 27-ந் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும்9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அருகில் உள்ள பள்ளிகளில் கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலைமையை சரிசெய்ய 2 வாரங்கள் ஆகும்.”

எனக் கூறினார்.

நீதிபதி,

”இந்நிலை நீண்டநாட்கள் தொடரக்கூடாது.  பள்ளியை விரைவில் திறந்து வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும்  தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். அதாவது மாவட்டத்துக்கு ஒரு மனநல ஆலோசகராவது இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பாக விடுதிகளுடன் கூடிய பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் இருப்பது மிகவும் அவசியம்.  ஊடகங்கள் இது போன்ற சம்பவங்களை மீண்டும் மீண்டும் பெரிதுபடுத்தி மற்ற மாணவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது. இம்மாதிரியான சம்பவத்தை ஊடகங்கள் முன்னிலைப்படுத்துவது,

இவற்றைப் பார்க்கும் மற்ற மாணவர்களின் மனநிலையைப் பாதிக்கிறது என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.  எனவே மாணவர்களைப் படிக்கும் எந்திரமாக மட்டும் மாற்றாமல் அவர்களுக்கான சிறந்த வெளிப்புறச் சூழலை ஏற்படுத்தித்தர வேண்டும்”

என்று உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.