சீனாவின் எதிர்ப்புகளை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசிக்கு சீன அரசு தடை விதித்திருப்பதாக தகவல்!

பீஜிங்,

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசிக்கு எதிராக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் பல்வேறு தடைகளை அறிவித்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

சீனாவின் கடும் மிரட்டல்களுக்கு மத்தியில், கடந்த 2-ந் தேதி இரவு தைவான் தலைநகர் தைபேவுக்கு, அமெரிக்காவை ஆளும் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற சபாநாயகருமான நான்சி பெலோசி சென்று, அந்த நாட்டின் அதிபர் சாய் இங் வென்னை சந்தித்து, அமெரிக்காவின் உறுதியான ஆதரவைத் தெரிவித்தார்.

இது சீனாவுக்கு அமெரிக்கா மீது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தைவானைச் சுற்றிலும் சீனா முற்றுகையிட்டு, தைவான் நாட்டின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு கடற்கரையையொட்டிய பகுதிகளில் சீனா அதிநவீன் ‘டாங்பெங்’ ஏவுகணைகளை வீசி சோதித்து வருகிறது.

இதனிடையே, ஜப்பான் சென்ற நான்சி, சீன ராணுவ நடவடிக்கை குறித்து ஜப்பானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,

தைவானில் அமைதி நிலவ வேண்டும் என்பதே அவர்களுக்கிடையேயான உறவுமுறையை உருவாக்கியது. சீன அரசு, அமெரிக்க பிரதிநிதியான என்னுடைய தைவான் பயணத்தை “ஒரு சாக்காக” பயன்படுத்தி அந்நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. தைவான் உலகின் சுதந்திரமான நாடுகளில் ஒன்றாகும்” மற்றும் “ஒரு செழிப்பான பொருளாதாரம் கொண்ட ஒரு சிறந்த ஜனநாயகம். தைவானை தனிமைப்படுத்த அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது” என்று கூறினார்.

இதனையடுத்து, அவருக்கு பதிலடியாக சீனா அவர்மீது தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக, சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், நான்சி பெலோசி, சீனாவின் உள்விவகாரங்களில் தீவிரமாகத் தலையிட்டு, சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தினார். மேலும், பெலோசி மற்றும் அவரது உடனடி குடும்பத்தினர் மீது பொருளாதாரத் தடைகளை சீனா விதிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

சீன அரசுக்கு எதிராக செயல்பட்டதற்காக, இதுவரை பல அமெரிக்க அதிகாரிகள் மீது சீனா கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு தடைகளை விதித்துள்ளது.

அதன்படி, இதுபோன்ற அமெரிக்க அதிகாரிகள் மீதான தடைகள் மூலம், அவர்கள் சீனாவிற்குள் நுழைவதற்கும் சீன நிறுவனங்களுடன் வணிகம் செய்வதற்கும் தடை விதிக்கப்படும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.