முதல்வர் போட்ட உத்தரவு: உடனே பணியை தொடங்கிய அன்பில் மகேஷ்

மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு முயற்சித்து வருகிறோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் தஞ்சாவூர் பாரம்பரிய கைவினை கலை பொருட்களின் கண்காட்சியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் கண்காட்சியில் வைத்திருக்கக்கூடிய பொருட்களை பற்றி கேட்டறிந்தார் மேலும் அங்கு வைத்திருந்த நாதஸ்வர கடையில் நாதஸ்வரம் வாசித்துப் பார்த்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “இந்த நாள் பெருமைக்குரிய நாளாக பார்க்கப்படுகிறது. தஞ்சாவூரின் விற்பனைக் கூடத்தை நான் சென்னையில் திறந்து வைத்திருக்கின்றேன். இந்த கைவினை கலைப் பொருட்கள் விற்பனை நிலையம் மற்றும் கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும். பொதுமக்கள் இதை பார்வையிட்டு பாரம்பரியத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த கண்காட்சியை சர்வதேச அளவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த புவிசார் குறியீடு பெற்ற 10 வகையான பொருட்கள் இங்க இடம் பெற்றிருக்கிறது. இன்னும் 24 வகையான பாரம்பரிய பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு விண்ணப்பிக்க முதலமைச்சர்

உத்தரவிட்டுள்ளார்.

மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு முயற்சித்து வருகிறோம். பள்ளிக்கல்வித்துறை சார்பில் புத்தக கண்காட்சியில் இந்த பாரம்பரிய புவிசார் குறியீடு பெற்ற பொருட்களையும் காட்சிபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இனி வரும் காலங்களில் இந்த கண்காட்சியை மற்ற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் மற்றும் சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.