'இந்தியாவே அந்த நாயோட பெருமையத்தான் பேசுது'… அமர் பிரசாத்துக்கு இயக்குனர் நவீன் பதிலடி

நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 15 அன்று 75 வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கோடியை ஏற்றி மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, நாட்டு மக்கள் அனைவரும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 5 இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டும் என்று கூறி ஒவ்வொன்றாக பட்டியலிட்டார். அந்த வகையில், 5 வது இலக்கை பிரதமர் விவரித்தபோது, மாநில அரசுகள் மக்களுக்கு இலவசங்களை அறிவிக்காமல் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றி சுதந்திர நூற்றாண்டை பெருமையாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அது செய்தி தொலைக்காட்சிகளில் விவாதமாக மாறியது. ஓட்டு அரசியலில் இலவசங்கள் முக்கிய பங்காற்றி வரும் நிலையில் நாட்டின் பிரதமர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதை குறித்து அரசியல் தலைவர்களிடம் கருத்து கேட்டு விவாதங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் ”இந்தியா டுடே” செய்தி சேனல் நடத்திய விவாதத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார்.

அப்போது அவர், நான் இங்கு ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். நீங்கள் கூறும் கருத்து ஏதாவது அரசியலமைப்பு சட்டப்படி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நாங்கள் செவிகொடுப்போம். அல்லது உங்களுக்கு ஏதேனும் சிறப்பு நிபுணத்துவம் இருக்க வேண்டும் அதாவது பொருளாதாரத்தில் இரண்டு முனைவர் பட்டங்கள், அல்லது நோபல் பரிசு என நீங்கள் எங்களை விட சிறந்தவர் என்று நிரூபிக்க ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். அல்லது நீங்கள் பொருளாதாரத்தில் சிறப்பாக வளர்த்துள்ளீர்கள் என்றாலும் நீங்கள் கூறுவதை நாங்கள் கவனிக்கலாம். இவற்றில் எதுவுமே இல்லை என்றால் நாங்கள் ஏன் யாரோ ஒருவர் சொல்வதை இதுதான் சரியான வரையறை என்று நம்ப வேண்டும்? நாங்கள் ஒன்றிய அரசி விட சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். அடுத்த மூன்று ஆண்டுகளும் அவ்வாறே தொடர்ந்து சிறப்பாக செயல்படுவோம்.

ஒன்றிய நிதி ஆதாரத்திற்கு நாங்கள் மிகப்பெரிய பங்களிப்பவராக உள்ளோம். நாங்கள் ஒரு ரூபாய் ஒன்றிய அரசுக்கு வழங்கினால் எங்களுக்கு 33 அல்லது 35 பைசாதான் திரும்ப கிடைக்கிறது. நாங்கள் ஏன் நீங்கள் கூறுவதை கேட்க வேண்டும்? எந்த அடிப்படையில்? நீங்கள் நிதித்துறை நிபுணரா? இல்லை… நீங்கள் நோபல் பரிசு பெற்றுள்ளீர்களா? இல்லை… எங்களை விட சிறப்பாக செயல்பட்டீர்களா? இல்லை… பிறகு எந்த அடிப்படையில் எங்களது கொள்கைகளை உங்களுக்காக மாற்றிக்கொள்ள வேண்டும்? என் இவ்வாறு பிடிஆர் அந்த விவாதத்தில் பிரதமரின் ஆலோசனைக்கு எதிராக அதிரடி காட்டியிருந்தார்.

இது தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது. இன்று வரை அமைச்சர் பழனிவேல் பேசும் அந்த வீடியோ பயங்கர வைரல் ஆகி வருகிறது. இதனால் பாஜகவினர் பிடிஆர் மீது எரிச்சல் அடைந்துள்ளனர். அவரை விமர்சித்து பேசி வருகின்றனர். இந்நிலையில், தமிழக பாஜகவின் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத் துறை பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி மோசமான ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், ”மதுரையில் ஒரு டாக் ரொம்ப கத்திக்கிட்டு இருக்கு. அதுக்கு அப்பா தாத்தா பெருமை வேற” என பதிவிட்டுள்ளார். இதற்கு கடும் சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுத்து மூடர் கூடம் இயக்குனர் நவீன் ட்வீட்டியுள்ளார்.

இயக்குனர் நவீன், ”அது நன்றியுள்ள நாய் சகோதரா. திருடனுங்க வந்தா கத்தத்தான் செய்யும். அந்த நாய் அப்பா தாத்தா பெருமை பேசல. இந்தியாவே அந்த நாயோட பெருமையத்தான் பேசுது. அப்படி கெத்தான ஒரு நாய். திருட்டுப் பயலுவளுக்கு அந்தமாரி சூப்பர் நாய்கள கண்டா டரியல் ஆகத்தான் செய்யும்’ என பதிவிட்டு ‘தமிழ்நாட்டுநாய்’ என்ற ஹேஷ்டேகையும் உருவாக்கியுள்ளார். இந்த இரண்டு ட்வீட்டுக்கும் மாறி மாறி கமெண்டுகள் குவிகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.