சோனியா, ராகுலின் நம்பிக்கை… காங்கிரஸ் தலைவர் தேர்தலில் முந்தும் மல்லிகார்ஜூன கார்கே – யார் இவர்?!

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவருக்கான போட்டியில் அசோக் கெலாட் விலகிய நிலையில், மல்லிகார்ஜூன கார்கேவின் பெயர் கட்சி தலைமையால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. நீண்ட நெடிய அரசியல் அனுபவம் கொண்டவர் என்பதாலும், கட்சி தலைமையின் நம்பிக்கைக்கு உரியவர் என்பதாலும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. காந்தி குடும்பத்தின் ஆசியுடன் தேர்தல் களத்தில் முன்னணியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

யார் இந்த மல்லிகார்ஜூன கார்கே?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக செயலாற்றிய இவர், 2008-ல் கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் போது கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் இருந்தார். அரசியல் வலுவை எடுத்துச் சொல்லும் வண்ணம் தொடர்ச்சியாக 10 முறை(1972, 1978, 1983, 1985, 1989, 1994, 1999, 2004, 2008, 2009) தேர்தலில் வெற்றி பெற்று, இந்திய அரசியல் வரலாற்றில் சாதனையும் படைத்துள்ள கார்கே, குல்பர்காவில் உள்ள அரசு கல்லூரியில் மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, மாணவர் சங்கத் தலைவராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர்.

சோனியா – ராகுல் காந்தி

இதனைத்தொடர்ந்து 1969 -ல், MSK மில்ஸ் ஊழியர் சங்கத்தின் சட்ட ஆலோசகராகவும், சம்யுக்தா மஜ்தூர் சங்கத்தின் தொழிற்சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார். அந்த சமயத்தில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் பல போராட்டங்களையும் வழிநடத்தியிருக்கிறார்.1969-ல், இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்து கொண்டு, குல்பர்கா நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார். பின், 1972-ல் கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் முதன்முதலில் போட்டியிட்டு குர்மித்கல் தொகுதியில் வெற்றி பெற்றார்.1976-ஆம் ஆண்டில், அவர் தொடக்கக் கல்விக்கான மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். அந்த நேரத்தில், 16,000-க்கும் மேற்பட்ட SC/ST ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களில், அவர்கள் நேரடியாக சேவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். முதன்முறையாக SC/ST நிர்வாகங்களால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு உதவித்தொகை குறியீட்டின் கீழ் மானியங்கள் வழங்கப்பட்டன. இப்படியாக கர்நாடக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத தலைவராக உருவானார் கார்கே.

1994-ஆம் ஆண்டில், குர்மித்கலில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு ஆறாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரானார். 1999-ஆம் ஆண்டு, ஏழாவது முறையாக கர்நாடக சட்டமன்றத்திற்கு தேர்வான போது, அம்மாநில முதலமைச்சர் பதவிக்கு முன்னணியில் இருந்தார். வீரப்பனால் ராஜ்குமார் கடத்தப்பட்ட நேரம், காவிரி கலவரம்… என கர்நாடகாவின் இக்கட்டான காலமாக கருதப்பட்ட சூழல்களில் எஸ்.எம்.கிருஷ்ணா அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக கார்கே இருந்தார். 2004 -ஆம் ஆண்டு, தொடர்ந்து எட்டாவது முறையாக கர்நாடக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, மீண்டும் கர்நாடக முதல்வர் பதவிக்கு ஒரு முன்னோடியாக கருதப்பட்டார்.

நடிகர் ராஜ்குமார், வீரப்பன்

2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது குல்பர்கா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, 73,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மாநில அரசியலிலிருந்து தேசிய அரசியலில் தடம் பதித்தார் கார்கே. இதற்கு முன்னரே தேசிய அரசியல் விவகாரங்களை கையாண்டு வந்திருந்தாலும், இந்த வெற்றியின் மூலமல் மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், குல்பர்கா மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் ஜி.ஜாதவிடம் 95,452 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதன் மூலம் மல்லிகார்ஜூன் கார்கேவின் கோட்டையாக கருதப்பட்ட குல்பர்கா தொகுதியில் முதன்முறையாக தோல்வியைச் சந்தித்தார். இதனையடுத்து கார்கே தனது 78-வது வயதில், 2020-ல் கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபாவிற்கு ஒரு மனதாக தேர்வானார். 2021-ல் ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

காங்கிரஸ் எம்.பி சசி தரூர்

2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17-ல் நடைபெற உள்ளது. இத்தகைய வலுவான அரசியல் பின்னணியைக் கொண்ட கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு சசி தரூரை எதிர்த்து போட்டியிட உள்ளார். ஜி 23 சார்பாக, காந்தி குடும்பத்தினர் அல்லாத ஒருவர் தலைமைக்கு வரவேண்டும் என்ற கருத்தை வலுயுறுத்தும் சசி தரூர் ஒரு புறம், சோனியா, ராகுலின் நம்பிக்கையைப் பெற்று அரசியலில் பல தலைமுறையைக் கண்ட கார்கே மறுபுறம். தலைமையை வெல்ல போவது யார்? பொறுத்திருந்து பார்ப்போம்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.