பொன்னியின் செல்வன்தான் பாகுபலியைவிட பெஸ்ட்… அடுக்கடுக்கான காரணங்கள்

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாகியுள்ளது. இத்தனை ஆண்டுகள் பலர் செய்த முயற்சி கைகூடாமல் போக மணிரத்னம் அதை சாத்தியமாக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 2000 பக்கங்கள் கொண்ட நாவலை இரண்டு பாகங்களாக பல நடிகர்களை வைத்து 150 நாள்களில் ஷூட்டிங்கையும் முடித்திருக்கிறார். படத்தை பார்த்த ரசிகர்களில் ஒருதரப்பினர் கொண்டாடிக்கொண்டிருக்க மற்றொரு தரப்பினர் படம் திருப்திப்படுத்தவில்லை என்கின்றனர். இந்த இரண்டு தரப்பினர் மட்டுமின்றி மூன்றாவது தரப்பினரும் இருக்கின்றனர். அவர்கள் பொன்னியின் செல்வனை பாகுபலியோடு ஒப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். பொதுவாக ஒரு படத்தோடு இன்னொரு படத்தை ஒப்பிடுவது இயல்புதான் என கடந்து செல்லலாம். ஆனால் இதுபோன்ற படங்களை ஒப்பிட்டு சண்டையிட்டுக்கொள்வது தேவையில்லாத ஒன்று. ஏனெனில் பாகுபலி வேறு, பொன்னியின் செல்வன் வேறு.

ஆம் பாகுபலி கற்பனைக் கதை. அங்கே எந்தக் கடிவாளமும் இல்லாதபோது பனைமரத்தையும் வளைத்து போர் தொடுக்கலாம், ஒரு மன்னன் 1000 பேரையும் பறக்கவிடலாம், கொட்டுகிற அருவியில் ஏறலாம். ஆனால் பொன்னியின் செல்வன் அப்படி அல்ல. ரத்தமும், சதையுமாக வாழ்ந்து மறைந்த அரச குலத்தை சேர்ந்தவர்களின் வாழ்க்கை பயணமும், கல்கியின் புனைவும் சேர்ந்தது. கல்கியின் புனைவு சேர்ந்திருக்கிறதே என கேள்வி எழுப்பலாம். ஆனால் பொன்னியின் செல்வனில் வெறும் புனைவு மட்டுமே இல்லை. கிட்டத்தட்ட 70 விழுக்காடு உண்மையகா நடந்த கதை. அதுதொடர்பான சாட்சியங்களும் கல்வெட்டுக்களில் இருக்கின்றன. பாகுபலிக்கான சாட்சியங்கள் ராஜமௌலியின் எழுத்துக்களில் மட்டுமே இருக்கின்றன.

முக்கியமாக கல்கியின் ஒவ்வொரு வர்ணனையும், விவரணையும் ஏற்கனவே வாசகர்கள் எண்ணத்திலும், நினைவிலும் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் இருப்பவை. அதனால் அப்படிப்பட்ட நாவலை படமாக்கும்போது ஈ அடிச்சான் காப்பியாக எடுத்துவைத்தால் பொன்னியின் செல்வன் என்ற நாவலுக்கும் இழுக்கு, இயக்குநருக்கும் இழுக்கு. அதனால் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக மணிரத்னம் தவறாக படம் எடுத்தால் விமர்சிக்கலாம், பாகுபலியோடு ஒப்பிடலாம். ஆனால் மணிரத்னம் எடுத்திருக்கிறார் என்பதாலேயே விமர்சிப்பதோ, ஒப்பிடுவதோ அறம் ஆகாது. ஏனெனில், மணிரத்னம் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் மீது எப்போதும் சிலருக்கு விமர்சன பார்வை உண்டு. ஆனால் அந்த விமர்சனங்களை எல்லாம் பொன்னியின் செல்வனில் உடைத்திருக்கிறார் மணிரத்னம்.

அதுமட்டுமின்றி கிராஃபிக்ஸ்களை குறைத்துக்கொண்டு லைவ் லொகேஷன்களுக்கு அழைத்து சென்றதிலேயே மணிரத்னம் இயக்குநராக வெற்றி பெற்றுவிட்டார். ஏனெனில் கிராஃபிக்ஸை மட்டுமே துணையாகக்கொண்டு உருவாகும் படங்களைவிட ரியாலிட்டியை துணையாகக்கொண்டு உருவாகும் படங்கள்தான் ரசிகர்களுக்குள் ஊடுருவி நிலைக்கும். பொன்னியின் செல்வன் நாவல் அப்படித்தான் வாசகர்கள் மத்தியில் நிலைத்திருக்கிறது. அதேபோல்தான் பொன்னியின் செல்வன் திரைப்படமும் நிலைக்கும். மன்னர் காலத்து படங்கள் என்றாலே செந்தமிழ் பேசிக்கொண்டுதான் இருக்க வேண்டும் என்ற டெம்ப்ளேட்டையும் இதில் மணிரத்னம் உடைத்திருக்கிறார். இது ஆரோக்கியமான ஒன்றே.

Maniratnam

இவை எல்லாவற்றையும் தாண்டி பொன்னியின் செல்வனின் சிறப்பு என்னவென்றால் அதில் வரும் கதாபாத்திரங்களும், அவர்களின் உளவியல் தன்மைகளும், அவர்களுக்கான வெயிட்டேஜும்தான். ஆனால் பாகுபலியின் கதாபாத்திரங்களில் நிறையவே முரண்கள் உண்டு. முக்கியமாக பெண்களின் கதாபாத்திரங்கள். பாகுபலியில் ஒரு பக்கம் ராஜமாதாவாக ரம்யா கிருஷ்ணன், தேவசேனாவாக அனுஷ்காவின் கதாபாத்திரங்கள், துணிவும் அதிகாரமும் மிக்கவையாக வடிவமைக்கப்பட்டிருக்கும். 

ஆனால், தனக்கென ஒரு லட்சியத்துடன் வாழும் ஒரு போராளிப் பெண்ணை (தமன்னா), கண்டதும் காதலில் விழும் நாயகன் அவருக்கு அலங்காரங்கள் செய்து அவரது அழகையும், பெண்மையையும் உணர வைப்பது போன்றும் இருக்கும். பெண்மையின் அழகு என்பது அலங்காரத்தில்தான் இருக்கிறதா? 

அதேசமயம் பொன்னியின் செல்வனில் பூங்குழலி, குந்தவை, நந்தினி என பெண் கதாபாத்திரங்களை கவனியுங்கள். தைரியம், ராஜ தந்திரம், கோபம் என எதுவெல்லாம் ஆண்களுக்கு மட்டும் சொந்தம் என்று சொல்லப்பட்டதோ அது அனைத்தும் பொன்னியின் செல்விகளுக்கு இருக்கும். இதை குலைக்காமல் எடுத்ததன் மூலமே கல்கிக்கு மணிரத்னம் தனது மரியாதையை செலுத்திவிட்டார். குறிப்பாக தன்னைக் காக்க மகன் வருவான் என ஆண்டுக் கணக்கில் கால்கள் கட்டப்பட்டு இருக்கும் தேவசேனாவையும், தான் மகனாக நினைக்கும் பொன்னியின் செல்வனை சூழும் ஆபத்துகளிலிருந்து காக்கும் மந்தாகினியையும் ஒப்பிடவேக்கூடாது.

Ponniyin selvan

பாகுபலியும் மன்னர் காலத்து நாற்காலி சண்டைதான், பொன்னியின் செல்வனும் மன்னர் காலத்து நாற்காலி சண்டைதான். ஆனால் இரண்டு சண்டைகளுக்கும் வேறுபாடு இருக்கிறது. பாகுபலியின் நாற்காலி சண்டை என்பது சகோதரர்களுக்குள் அடங்கக்கூடியது. ஆனால் பொன்னியின் செல்வன் நாற்காலி சண்டை என்பது 4 தலைமுறைகளுக்குரியது. அப்படி 4 தலைமுறைகள் கதையை எந்த வித குறையும் இல்லாமல் சொல்ல வேண்டுமென்றால் இன்னும் 4 பாகங்கள் எடுக்க வேண்டும். ஏனெனில் பொன்னியின் செல்வனின் சம்பவங்கள் அவ்வளவு பெரியவை.

பொன்னியின் செல்வன் தாக்கத்திலேயே பாகுபலி உருவாகியிருக்கிறது என்பது அந்தப் படம் வெளியானபோதே பொ.செ வாசகர்களின் கருத்தாக இருந்தது. பாகுபலியை ரம்யா கிருஷ்ணனின் கை நீரிலிருந்து தூக்கி நிறுத்தும் காட்சி, அருள்மொழி வர்மனை பொன்னி தாய் காப்பாற்றுவது போன்று அப்படியே பொன்னியின் செல்வன் நாவலில் வரிகளாக இருக்கிறது. அதுமட்டுமின்றி பாகுபலியில் அதிகாரப்போட்டி இரு நபர்களுக்கான ஆசையில் தொடங்கும். ஆனால் பொன்னியின் செல்வனில் அப்படி அல்ல. இங்கு நடந்த அதிகார சண்டை சூழல்களால் தொடங்கியது. அந்த சூழல்தான் பழுவேட்டரையரை இந்தப் போட்டிக்குள் தள்ளுகிறது. ஆனால் மதுராந்தகனின் உண்மை முகம் தெரிந்த பிறகு பழுவேட்டரையர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் அரங்கேறியிருக்கிறது.

Bahubali

காட்சிகளில் பிரமாண்டம் கடத்துவதைவிட வசனங்கள், கதாபாத்திரங்கள் மூலம் பிரமாண்டம் காட்டுவதில் மணி முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். 1000 பேரை ஒருவன் ஒரே சண்டையில் கொல்வது சாத்தியமா என்றால் அதற்கு உறுதியான பதில் இல்லை. மன்னர்கள் என்ன சிறப்பு அவதாரமா என்ற கேள்விக்கு மணிரத்னம் இதில் வந்தியத்தேவன் மூலம் விடையளித்திருக்கிறார்.

குந்தவையிடம் வந்தியத்தேவன், தன்னால் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 1000த்தில் ஆரம்பித்து 50க்கு கொண்டுவருவார். இதுதான் எதார்த்தம். எப்போதும் எதார்த்தம்தானே பெரும் பிரமாண்டம். இப்படி பல பிரமாண்டங்கள் பொன்னியின் செல்வனில் இருக்கின்றன. அப்படிப் பார்க்கையில் பாகுபலியைவிட பொன்னியின் செல்வன் படம்தான் பிரமாண்டமே.

நாவல் படிக்காதவர்கள் மத்தியில் படத்தின் ஓட்டம் ஒட்டவில்லை, கதை புரியவில்லை என்ற வாதம் எழுந்திருக்கிறது. அப்படி எழுவது இயல்புதான். அதற்கான விடைகள் பொன்னியின் செல்வன் பாகம் 2ல் தெரியவரும்.  அதிலும் தெளிவாக புரியவில்லை என்றால் பொன்னியின் செல்வனை தாராளமாக விமர்சிக்கலாம்.  ஆனால் வரலாற்று புனைவோடு உருவான பொன்னியின் செல்வனை முழுக்க முழுக்க கற்பனையோடு உருவான பாகுபலியோடு ஒப்பிடுவது அறம் அல்ல.  

Kalki

இப்படி பாகுபலியின் பாதை வேறு பொன்னியின் செல்வனின் பாதை வேறு. இரண்டு பாதைகளிலும் ரசிகர்கள் செல்லலாம். ஆனால் கற்பனை குதிரை செல்லும் பாதையில் உண்மை குதிரையை ஓட்டிப்பார்ப்பது நிச்சயம் சரியானது அல்ல. பொன்னியின் செல்வன் ஏற்கனவே பெரும் வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் அதை ஒப்பீடு விவாதத்திற்குள் இழுத்துவிட்டால் வேள்பாரி, சிவகாமியின் சபதம் போன்ற வரலாற்று சரித்திர கதைகள் திரைக்கு வராமல் போகலாம் வந்தாலும் இதுபோன்ற ஒரு நிலையில் சிக்கிக்கொள்ளலாம். அப்படி சிக்கிக்கொண்டால் இனி உண்மை வரலாற்றுக்கு மதிப்பு இல்லை கற்பனை வரலாற்றுக்குத்தான் மதிப்பு என்ற சூழல் உருவாகிவிடும். அப்படி உருவாகும்பட்சத்தில் சினிமா அடுத்தக்கட்டத்திற்கு நகராமல் உண்மைக்கு தொலைவிலேயே நின்றுவிடும்.

முக்கியமாக தமிழ் சினிமாவில் இப்போதுதான் நாவல்கள், சிறுகதைகள் திரைப்படமாகும் சூழல்கள் பெருகியிருக்கின்றன. வாசிப்பு பழக்கம் இல்லாதவர்களுக்கு இதுபோன்ற படங்கள் நிச்சயம் தேவையான ஒன்று. அதன் உச்சபட்சமாக பொன்னியின் செல்வன் இப்போது திரைவடிவமாகி இருக்கிறது. இதற்கு அடுத்ததாக வேள்பாரி, சிவகாமியின் சபதம் போன்ற வரலாற்று கதைகள் படமாகலாம். இப்படி வரலாற்று புதினங்கள் திரைப்படமாவதற்கு பொன்னியின் செல்வன் முதல் விதையை போட்டிருக்கிறது. அந்த விதையை விருட்சமாக வளர்க்க வேண்டியதுதான் நமது கடமையே ஒழிய; ஒழிப்பது அல்ல…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.