`காதலை அவள் ஏற்கவில்லை… அதனால்தான் ரயிலில் தள்ளிவிட்டேன்' – மாணவி கொலையில் இளைஞர் அதிர்ச்சி தகவல்

சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவர், தி.நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். கல்லூரிக்குச் செல்ல மாணவி, தோழிகளுடன் பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு நேற்று மதியம் (13.10.2022) வந்தார். ரயிலுக்காக காத்திருந்த மாணவியிடம் அவருக்கு தெரிந்த இளைஞர் சதீஷ் என்பவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரயில் வந்துக் கொண்டிருந்தது. மாணவிக்கும் சதீஷிக்கும் இடையே திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சதீஷ், மாணவியை தண்டவாளத்தில் தள்ளி விட்டார். இதில் ரயில் மோதி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மாணவியின் சடலம்

இதுகுறித்து தி.நகர் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்ததாக சதீஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை போலீஸார் கைது செய்தனர். சதீஷிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் மாணவியின் தந்தை, மகள் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மதுவில் விஷம் கலந்து நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தந்தை, மாரடைப்பு காரணமாக இறந்ததாக முதலில் தகவல் பரவியது. தற்போதுதான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். அடுத்தடுத்து மகள், அவளின் தந்தை என உயிரிழந்ததால் அவர்களின் குடும்பம் சோகத்தில் மூழ்கியது. இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்குப்பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர். மாணவியின் தந்தை தற்கொலை சம்பவம் தொடர்பாக ஆதம்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மாணவியின் கொலை, அவரின் தந்தை தற்கொலை சம்பவங்கள் குறித்து ரயில்வே போலீஸார், ஆதம்பாக்கம் போலீஸார் ஆகியோரிடம் விசாரித்தோம். “பரங்கிமலை ரயில் நிலையத்திலிருந்த பயணிகள், துப்பரவு பணியாளர்கள், மாணவியின் தோழிகள் ஆகியோர் அளித்த தகவலின்படி கொலை வழக்கு பதிவு செய்துள்ளோம். இந்த வழக்கில் கைதான சதீஷிடம் விசாரித்தபோது அவர் என்ன நடந்தது என்பதை வாக்குமூலமாக அளித்திருக்கிறார். விசாரணைக்குப்பிறகு சதீஷ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளார்” என்றனர்.

விசாரணையின் போது சதீஷ் என்ன கூறினார் என்று ரயில்வே போலீஸாரிடம் கேட்டதற்கு, “உயிரிழந்த மாணவியை தனக்கு சிறுவயது முதலேயே நன்றாகத் தெரியும். இருவரும் ஒரே காவலர் குடியிருப்பில் குடியிருந்ததால் நட்பாக பழகிவந்தோம். எனக்கு விவரம் தெரிந்தபிறகு மாணவியை காதலித்தேன். அதனால் என்னுடைய குடும்பத்துக்கும் மாணவியின் குடும்பத்துக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் என்னுடைய தந்தை காவலர் பணியை விட்டு வேறு வேலைக்குச் சென்றார். அதனால் காவலர் குடியிருப்பில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு அதன்பக்கத்தில் குடியிருந்தோம். அப்போதும் மாணவியிடம் காதலை வெளிப்படுத்தினேன். அதை அவள், வீட்டில் சொல்லிவிட்டாள். அதனால், சில மாதங்களுக்கு முன்பு கூட மாணவியின் பெற்றோர் என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

சதீஷ்

அதன்பேரில் போலீஸார் என்னிடமும் என் குடும்பத்தினரிடம் விசாரித்தனர். அப்போது மாணவிக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எந்தவித தொல்லையும் கொடுக்கக் கூடாது என்று என்னிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர். ஆனால், மாணவியை என்னால் மறக்க முடியவில்லை. அதனால், அவளைப் பின்தொடர்ந்து செல்வேன். சம்பவத்தன்று பரங்கிமலை ரயில் நிலையத்தில்கூட மாணவியிடம் என் காதலை கூறினேன். ஆனால் அவள் காதலை ஏற்கவில்லை. அதனால்தான் அவளை தண்டவாளத்தில் தள்ளிவிட்டேன். அவள் இல்லாத உலகத்தில் எனக்கும் உயிர்வாழ ஆசையில்லை என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.