நீட் தேர்வுக்கு எதிரான மனு மீதான விசாரணையை 3 மாதங்களுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்…

சென்னை: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனுமீதான விசாரணையை 3 வாதங்களுக்கு நீதிமன்றம்  ஒத்திவைத்தது.

மத்தியஅரசு நாடு முழுவதும் நீட் தேர்வு கட்டாயம் என அறிவித்து உள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில், கடந்த அதிமுக ஆட்சியின்போது, அதாவது  2020-ம் ஆண்டு  ரிட் மனு தாக்கல் செய்தது. பின்னர் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், திமுக ஆட்சியில், அந்த மனுவில் சில திருத்தங்கள் செய்து மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி, மனுவில், மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்தால், கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது குறித்து, தமிழகஅரசு அமைத்த விசாரணை குழு அளித்த அறிக்கை மற்றும் அது தொடர்பான  விரிவான புள்ளிவிவரங்கள் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்த ரிட் மனுமீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி  சுதான்சு தூலியா தலைமையிலான  அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக அரசின் வலியுறுத்தல்களை கருத்தில் கொண்டு ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் சட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.