உலகக்கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கியிருக்கிறது. சூப்பர் 12 சுற்றுக்கு முன்பான முதல் சுற்றின் முதல் போட்டியில் இன்று இலங்கையும் நமீபியாவும் மோதியிருந்தன. அதிர்ச்சியளிக்கும் வகையில் முதல் போட்டியிலேயே அப்செட் நிகழ்ந்தது. நமீபியா அணி இலங்கையை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது.
இலங்கை அணியின் கேப்டனான தசுன் சனாகாதான் டாஸை வென்று முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 20 ஓவர்களில் 163 ரன்களை சேர்த்தது. தொடக்கத்தில் நமீபிய அணி அத்தனை சிறப்பாக ஆடவில்லை. ரன்னும் சேர்க்காமல் விக்கெட்டையும் வரிசையாக இழந்து கொண்டிருந்தனர். 14 ஓவர்கள் முடிகையில் 91-5 என்ற நிலையில் இருந்தனர். இந்நிலையில், கடைசிக்கட்ட ஓவர்களில் ஃப்ரைலிங்கும் ஜேஜே ஸ்மிட்டும் அதிரடியாக ஆரம்பித்தனர். தொடர்ச்சியாக பவுண்டரியும் சிக்சர்களும் வந்துகொண்டே இருந்தது.
இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் நமீபியா அணி 163 ரன்களை எட்டியது. ஃப்ரைலிங் 44 ரன்களில் ரன் அவுட் ஆக, ஸ்மிட் 31 ரன்களில் நாட் அவுட்டாக களத்தில் நின்றார்.

இலங்கை அணிக்கு டார்கெட் 164. இலங்கை அணிக்குமே ஓப்பனிங் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. பவர்ப்ளேயில் மட்டுமே குஷால் மெண்டீஸ், நிஷாங்கா, குணதிலகா என மூன்று முக்கிய பேட்டர்களை இலங்கை இழந்திருந்தது. சிக்காங்கோ, வீஸ் என வீசிய அத்தனை பந்துவீச்சாளர்களுமே சிறப்பாக வீசியிருந்தனர். விக்கெட்டுகள் கொடுத்த உற்சாகத்தில் நமீபியாவின் ஃபீல்டிங்கும் ரொம்பவே துடிப்பாக இருந்தது. தொடக்க வீழ்ச்சியிலிருந்து இலங்கை அணியால் கடைசி வரை நிமிரவே முடியவில்லை. 19 ஓவர்களில் 108 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட் ஆனது. 55 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியா வென்றது.
உலகக்கோப்பையின் முதல் போட்டியே ஒரு பெரும் அப்செட்டுடன் தொடங்கியிருக்கிறது.
இந்த முதல் சுற்றில் ஆடும் அணிகளில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸை தவிர்த்து பலமிக்க அணியாக நமீபியா பார்க்கப்பட்டது.
கடந்த உலகக்கோப்பையிலுமே கூட இந்தியா போன்ற பெரிய அணிகளை தவிர்த்து மற்ற அணிகளுக்கு எதிராக நமீபியா சிறப்பாகவே ஆடியிருந்தது. சில போட்டிகளில் வென்றிருக்கவும் செய்தது.

ஆனாலும், இங்கே இலங்கையை வீழ்த்துவார்கள் என எதிர்பார்க்கவில்லை. ஆசியக்கோப்பையை வென்று புது உத்வேகத்துடன் உலகக்கோப்பைக்கு வந்த இலங்கை முதல் போட்டியிலேயே மோசமாக தோற்றிருக்கிறது.
கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், ஆசியக்கோப்பையிலுமே இலங்கை அணி முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக மோசமாகத்தான் தோற்றிருந்தது. அதிலிருந்து மீண்டு வந்தே தொடரை வென்றது.
நமீபியாவிற்கு இது ஒரு சிறப்பான வெற்றி. முட்டி மோதி வெல்லாமல் ஆதிக்கம் செலுத்தி வென்றிருக்கின்றனர்.
வெற்றி தோல்விகளைக் கடந்து உலகக்கோப்பைக்கு நல்ல தொடக்கம் கிடைத்திருக்கிறது. முதல் போட்டியிலிருந்தே சுவாரஸ்யம் தொற்றிக் கொள்ள தொடங்கியிருக்கிறது.