“சிறுபான்மையினர் ஒருவரை மாநில முதலமைச்சராக ஏற்றுக் கொள்வீர்களா,” என, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்திக்கு, பாஜக மூத்தத் தலைவர் ரவி சங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக இந்திய வம்சாவளியான அந்நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக் (42) தேர்வானார். அவருக்கு பிரிட்டன் மட்டுமல்லாமல், இந்தியாவில் இருந்தும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்த வாழ்த்துச் செய்தியில், “பெருமையான தருணம் இது. இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரிட்டனின் பிரதமராக தேர்வாகி உள்ளார். இந்தியர்கள் அனைவரும் இதை கொண்டாடி வரும் நிலையில், இது நமக்கெல்லாம் ஒன்றை நினைவுப்படுத்துகிறது. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை பிரிட்டன் மக்கள் தங்களின் பிரதமராக ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் நாம் இன்னும் என்ஆர்சி, சிஏஏ போன்ற பிளவுபடுத்தும் பாரபட்சமான சட்டங்களால் கட்டுண்டு கிடக்கிறோம்’ என தெரிவித்திருந்தார்.
மெகபூபா முப்தியின் இந்தப் பதிவுக்கு, பாஜக மூத்தத் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் பதிலடி கொடுத்து உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி உள்ளதாவது:
மெகபூபா முப்தி, ஜம்மு காஷ்மீரில் இனச் சிறுபான்மையினர் ஒருவரை மாநில முதலமைச்சராக நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? தயவு செய்து இதற்கு வெளிப்படையான பதிலைக் கூறுங்கள். பிரிட்டனின் பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து பெரும்பான்மைவாதத்திற்கு எதிராக தீவிரமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அவர்களுக்கு நான், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தலைமையையும், 10 வருடங்களாக மன்மோகன் சிங் நாட்டின் பிரதமராக இருந்தது குறித்தும் நினைவுபடுத்துகிறேன். தற்போது நமது ஜனாதிபதியாக பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு இருக்கிறார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திறமையான தலைவரான ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவரது இந்த மகத்தான வெற்றிக்கு நாம் அவருக்கு வாழ்த்துகள் தெரிவிக்க வேண்டும். ஆனால் சில தலைவர்கள் இந்த தருணத்திலும் அரசியல் செய்ய நினைக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.