“உங்கள் முதல்வரை நீங்களே தேர்ந்தெடுங்கள்" – பஞ்சாப் பாணியில் குஜராத்திலும் கெஜ்ரிவால் வியூகம்

டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருக்கும் ஆம் ஆத்மி, 27 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சி செய்துவரும் பா.ஜ.கவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்கவேண்டுமென்று தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டிவருகிறது. அதன் ஒருபகுதியாக, ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் கூறியது போல, குஜராத்திலும் இலவச மின்சாரம், சிறந்த கல்வி மற்றும் சுகாதார வசதிகள் என வாக்குறுதிகளை அறிவித்துவருகிறார்.

ஆம் ஆத்மி

இந்த நிலையில், கெஜ்ரிவால் குஜராத் தேர்தலுக்கான ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளரை தேர்வுசெய்யும் விதமாக, `உங்கள் முதல்வரை தேர்ந்தெடுங்கள்’ என்ற பெயரில் பிரச்சாரத்தை இன்று தொடங்கியிருக்கிறார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், “மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றிலிருந்து மக்கள் விடுபட வேண்டும். ஓராண்டுக்கு முன்னர் பா.ஜ.க தங்களின் முதல்வரை மாற்றியது. அவர்கள் ஏன் விஜய் ரூபானிக்கு பதிலாக பூபேந்திர பட்டேலை முதல்வராக நியமித்தார்கள்…. அதற்கு விஜய் ரூபானியிடம் ஏதோ தவறு இருந்தது என்று தானே அர்த்தம். ஜனநாயகத்தில் யார் முதல்வர் என்பதை மக்கள்தான் முடிவு செய்கிறார்கள். ஆனால், 2016-லும், 2021-ம் ஆண்டிலும் மக்களிடம் பா.ஜ.க கேட்கவே இல்லை.

அரவிந்த் கெஜ்ரிவால்

அதேசமயம், ஆம் ஆத்மி கட்சி, மக்கள் யாரை முதலமைச்சராக விரும்புகிறீர்கள் என்பதைப் அவர்களிடமே கேட்டுத் தீர்மானிக்கிறது. பஞ்சாப்பில் யார் முதலமைச்சராகவேண்டும் என்று மக்களிடம் கேட்டது உங்களுக்கு நினைவிருக்கும். மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப, நாங்கள் பகவந்த் மான் என்று பெயரிட்டோம். எனவே இன்று உங்கள் முதல்வராக யார் இருக்க வேண்டும் என்பதை எங்களிடம் கூறுங்கள் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

அரவிந்த் கெஜ்ரிவால்

பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிப்பதற்கு, 6357000360 என்ற எண்ணை வழங்குகிறோம். இந்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அல்லது வாட்ஸ்அப் செய்தி அல்லது குரல் செய்தி அனுப்பலாம். [email protected] என்ற மின்னஞ்சலுக்கும் செய்தியனுப்பலாம். நவம்பர் 3-ம் தேதி மாலை 5 மணி வரை இந்த எண் செயல்படும். முடிவுகள் நவம்பர் 4-ம் தேதி பொதுமக்களுக்குமுன் வைக்கப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.