விரிவாக்க பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலை மீண்டும் கணக்கெடுக்க வேண்டும்

*நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

நெல்லை : நெல்லை மாநகர பகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலை மீண்டும் கணக்கெடுக்க வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினர்.
நெல்லை மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் மேயர் பி.எம். சரவணன் தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் கே.ஆர். ராஜூ, கமிஷனர் சிவ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மண்டல தலைவர்கள் தச்சை ரேவதி பிரபு, பாளை பிரான்சிஸ், மேலப்பாளையம் கதீஜா இக்லாம் பாசிலா, நெல்லை மகேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் மக்கள் பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர்.

11வது வார்டு கவுன்சிலர் கந்தன்: வண்ணார்பேட்டையில் மாநகராட்சி ஆரம்ப பள்ளிக்கும், அங்குள்ள அங்கன்வாடிக்கும் குடிநீர் பைப் அமைத்துத் தர வேண்டும். குடிநீர் இல்லாமல் குழந்தைகள் சிரமப்படுவதால், அங்கு அடிபம்பு அமைத்து கொடுக்க வேண்டும்.55வது வார்டு மார்க்சிஸ்ட் கவுன்சிலர் முத்துசுப்பிரமணியன்: பாளை மண்டலத்திற்கு குப்பைகளை அள்ள 2 குப்பை லாரிகள் போதாது. தூய்மைப் பணியாளர்களின் பேட்டரி வண்டிகள் அடிக்கடி பழுதாகி நிற்கின்றன.

48வது வார்டு கவுன்சிலர் ஆமீனா பீவி: எனது வார்டுக்குட்பட்ட கருங்குளம் ராஜாஜி சாலையில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு விளையாட்டுத் திடல் அமைத்துத் தர வேண்டும். காட்டு புதுத்தெரு, அசன் தரகன் தெரு உள்ளிட்ட தெருக்களுக்கான ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டித் தர வேண்டும். பிஎஸ்என்எல் நகர், நபிநகர் உள்ளிட்ட விரிவாக்க பகுதிகளுக்கு புதிய குடிநீர் தேக்க தொட்டி அமைத்து தரவேண்டும்.

5வது வார்டு திமுக கவுன்சிலர் ஜெகநாதன்: ரஹ்மத் நகர் பகுதியில் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருகிறது. எனவே சீரான குடிநீர் வழங்க வேண்டும். திம்மராஜபுரம் பகுதியில் பழுதான அடிபம்புகளை சரி செய்ய வேண்டும். திம்மராஜபுரம், கக்கன் நகர், காவலர் குடியிருப்பு பகுதிகளில் ஒரு மாதமாக சாக்கடையில் மண் அள்ளப்படாமல் உள்ளது. அதை சரி செய்து தர வேண்டும்.

28வது வார்டு அதிமுக கவுன்சிலர் சந்திரசேகர்: எனது வார்டுக்குட்பட்ட பாரதியார் பள்ளியில் சமையலறை கூடம் திறக்கப்படாமல் உள்ளது. வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் பகுதியில் கட்டப்பட்டுள்ள தியேட்டர்கள் மாநகராட்சியின் முறையான அனுமதி பெற்றுள்ளதா? அங்கு அடிப்படை வசதிகள் இல்லை என கூறப்படுகிறது.செயற்பொறியாளர் பாஸ்கர்: உள்ளூர் திட்ட குழுமத்தின் அனுமதி பெற்றுதான் தியேட்டர்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

திமுக கவுன்சிலர் கிட்டு ராமகிருஷ்ணன்: அதிமுக ஆட்சியில் அனைத்து தீர்மானங்களும் ‘ஆல்பாஸ்’ என்ற முறையில் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டன. ஆனால் திமுக ஆட்சியில் ஜனநாயக முறைப்படி கூட்டம் நடத்தப்படுகிறது. நெல்லை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்களின் வசதிக்காக மாநகராட்சியின் வளாகத்திலேயே கேன்டீன் அமைத்துத் தர வேண்டும்.

40வது வார்டு கவுன்சிலர் வில்சன் மணித்துரை: நெல்லை மாநகராட்சி வளாகத்தில் பொதுமக்களுக்கு காத்திருப்போர் அறை ஒன்றும் அமைத்துத் தர வேண்டும்.
27வது வார்டு கவுன்சிலர் உலகநாதன்: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலை சிலையை மாநகராட்சி மைய அலுவலக வளாகத்திற்குள் நிறுவிட வேண்டும். அதற்காக இடம் ஒதுக்கி தர வேண்டும்.

கணக்கு குழு தலைவர் டாக்டர் சங்கர்: இந்தி திணிப்புக்கு எதிராக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். மேலும் அரசு பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.( இவ்விரு தீர்மானங்களும் உடனடியாக ஏற்று கொள்ளப்பட்டு மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன)பணிநியமனக்குழு உறுப்பினர் கோகுலவாணி சுரேஷ்: எனது 12வது வார்டு உடையார்பட்டி பால்பண்ணை தெருவில் புதியதாக தார்சாலையும், கழிவுநீர் ஓடையில் சிறிய பாலமும் அமைக்க வேண்டும். பாபுஜிநகர், கோமதிநகர் பகுதிகளில் மழைநீர் ஓடை அமைத்து தரவேண்டும்.

சுகாதாரக்குழு தலைவர் ரம்ஜான் அலி: 46வது வார்டுக்குட்பட்ட மேலநத்தம் சாலையை செப்பனிட்டு தர வேண்டும். அதில் வாகன ஓட்டிகள் நிம்மதியாக பயணிக்க முடியவில்லை.
நகரமைப்பு குழு தலைவர் சங்கீதா: எனது 41வது வார்டுக்குட்பட்ட பெருமாள்புரத்தில் பயோனியர் குமாரசாமிநகர், ராமலிங்கநகர், வெங்கடாத்திரி நகர் பகுதிகளில் குடிநீர் பல மாதங்களாக வருவதே இல்லை. அங்கு குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு 3 ஆண்டுகளாக குடிநீர் கிடைக்கவில்லை. பெருமாள்புரம் சி காலனி மேல்நிலைநீர்தேக்க தொட்டி 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. அங்கிருந்து 3 வார்டுகளுக்கு தண்ணீர் கொடுக்கின்றனர். இதனால் எனது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

50வது வார்டு கவுன்சிலர் ரசூல்மைதீன்: மழைநீர் வடிகால் நடவடிக்கைகளை துரிதமாக செய்து வரும் மாநகராட்சி மேயர் மற்றும் கமிஷனருக்கு பாராட்டு தெரிவித்து ெகாள்கிறேன். மேலப்பாளையத்தில் மட்டுமே 500 மாடுகளுக்கு மேல் சுற்றி வருகிறது. தெருநாய் தொல்லையும் அதிகம் உள்ளது. எனவே அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தச்சை மண்டல தலைவர் ரேவதி பிரபு: தச்சை மண்டலத்தில் உள்ள தெரு பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களை அகற்ற வேண்டும். புரம்- ஊருடையான் குடியிருப்பு சாலையை விரைந்து முடித்து தர வேண்டும். ஈரடுக்கு மேம்பாலத்தில் பழுதடைந்த பகுதியை சீரமைத்து தர வேண்டும்.

நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி: நெல்லை மண்டல பகுதிக்குட்பட்ட இடங்களில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் பணிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காந்திநகர் பகுதியில் தற்காலிக போலீஸ் டென்ட் அமைத்துத் தருவதோடு, மண்டலம் முழுவதும் உள்ள அடிபம்பு குழாய்களை சரி செய்து தர வேண்டும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் குறித்த பட்டியலை மீண்டும் வெளியிட்டு முதியோர் ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

51வது வார்டு கவுன்சிலர் சகாயஜூலியட் மேரி: மகிழ்ச்சிநகர், ஆசிரியர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள குடிநீர் வால்வு பழுதடைந்து குடிநீர் வீணாக தெருவில் செல்கிறது. மேலும் எங்கள் பகுதியில் உள்ள திறந்தவெளி கிணறுகளுக்கு மூடி போட்டு பாதுகாக்க வேண்டுகிறேன்.42வது வார்டு கவுன்சிலர் பொன்மாணிக்கம்: எனது வார்டில் ஆம்னிபேருந்து நிலையத்தை மீண்டும் இயக்கிட வேண்டும். பெருமாள்புரம் மின்கம்பங்களில் போதிய வெளிச்சம் வருவதில்லை. அதற்கு தடையாக உள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

தகுதி நீக்க தீர்மானம் ஒத்திவைப்பு

நெல்லை மாநகராட்சி கூட்டத்திற்கு அதிமுக கவுன்சிலர்கள் ஜெகநாதன், சந்திரசேகர், அமுதா, முத்துலட்சுமி ஆகிய 4 பேரும் ஒன்றிணைந்து வந்திருந்தனர். இதில் ஜெகநாதனும், முத்துலட்சுமியும் தொடர்ச்சியாக 3 கூட்டங்களுக்கு வராததால் அவர்களை தகுதி நீக்கம் செய்யும் தீர்மானம், சாதாரண கூட்ட அஜண்டாவில் வைக்கப்பட்டிருந்தது. இருவரும் மதுரை ஐகோர்ட்டில் ஸ்டே வாங்கியுள்ளதால், மாநகராட்சி சாதாரண கூட்டத்தின் 10 வது தீர்மானம் (தகுதி நீக்க தீர்மானம்) ஒத்தி வைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.