கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்தும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை குறைக்காத எண்ணெய் நிறுவனங்கள்: 6 மாதமாக ரூ.1100க்கு விற்பனை; இல்லத்தரசிகள் கடும் பாதிப்பு

சேலம்: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களை, ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்களும் சப்ளை செய்கிறது. இந்நிறுவனங்களின் கூட்டமைப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்கிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையும், காஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை மாற்றும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.

 ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய காலத்தில். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக வேகமாக உயர்ந்தது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை சராசரியாக ரூ.100க்கு மேல் உயர்த்தினர். அந்த நேரத்தில் காஸ் சிலிண்டர் விலையும் பெருமளவு உயர்த்தப்பட்டது. இதனால், வரலாறு காணாத வகையில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.1000ஐ எட்டியது. அதாவது, கடந்த மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கச்சா எண்ணெய் விலை 110 டாலருக்கு மேல் நிலையாக இருந்தது. மிக அதிகபட்சமாக 120 டாலர் எனவும் விற்பனையானது.

அந்த நேரத்தில் (மார்ச்) வீட்டு உபயோக சிலிண்டர் விலை சென்னையில் ரூ.915.50 என்ற நிலையில் இருந்து அதிரடியாக உயர்ந்தது. மே மாதத்தில் ரூ.1015.50 ஆகவும், பிறகு மே 19ம் தேதியில் ரூ.1018.50 ஆகவும், ஜூலை மாதத்தில் ரூ.1068.50 ஆகவும் அதிகரித்தது. இதற்கு பின் எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை. இதனால், நாடு முழுவதும் சராசரியாக சிலிண்டர் விலை ரூ.1100 என்ற நிலையில் விற்கப்பட்டு வருகிறது. இதனிடையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்துள்ளது. ஜூலை மாதத்தில் இருந்து குறைந்து, தற்போது 92 டாலர் என்ற நிலைக்கு சரிந்துள்ளது. இப்படி 25 சதவீத அளவிற்கு சரிவை பெற்றநிலையிலும், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு குறைக்கவில்லை.

விலை குறைப்பின் பலனை சாதாரண மக்களுக்கு வழங்காததால் ஏழை, நடுத்தர வர்க்கத்தின் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காரணம், கடந்த 6 மாதமாக ரூ.1000க்கு மேல் செலுத்தி சிலிண்டர் வாங்கி வருகின்றனர்.  ஒன்றிய அரசின் மானியமும் நிறுத்தப்பட்டு விட்டது. கச்சா எண்ணெய் விலை குறைக்கப்பட்ட இக்காலத்தில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை மட்டும் ரூ.615 குறைத்துள்ளனர். இதனால், ரூ.2300க்கு மேல் விற்கப்பட்ட அந்த சிலிண்டர், தற்போது ரூ.1700 முதல் ரூ.1800 வரையில் விற்கப்படுகிறது. நடப்பு மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறையும் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு கடும் ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த 1ம் தேதி வெளியான விலை பட்டியலில் கடந்த மாத விலையே நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.