அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடந்த போர் விமான சாகச நிகழ்ச்சியில் 2 விமானங்கள் மோதி 6 பேர் உயிரிழப்பு

டல்லாஸ்: அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நேற்று நடைபெற்ற போர் விமான சாகச நிகழ்ச்சியில், இரு விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்டதில் 6 பேர் உயிரிழந்தனர்.

இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க விமானப்படை பயன்படுத்திய போர் விமானங்களில் சில விமானங்கள் மட்டும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் போயிங் நிறுவனத்தின் பி-17 குண்டு வீச்சு விமானங்கள் மற்றும் பி-63 `கிங் கோப்ரா’ ரக போர் விமானங்கள் ஆகியவை போர் விமானக் கண்காட்சிகளில் பயன்படுத்தப்பட்டு வந்தன. மேலும், சில விமானங்கள் அருங்காட்சியங்களிலும் உள்ளன.

இந்நிலையில், விமானப்படை வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் எக்ஸிகியூட்டிவ் விமான நிலையத்தில், போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க விமானப்படையில் முக்கியப் பங்காற்றிய போயிங் பி-17 ரக போர் விமானம் ஒன்று வானில் தாழ்வாகப் பறந்து சென்றது.

அப்போது, அதன் அருகே பறந்து சென்று பார்வையாளர்களை மகிழ்விக்கும் நோக்குடன், பி-63 கிங் கோப்ரா ரகபோர் விமானம் வேகமாக குறுக்கே பறந்து வந்தது. ஆனால், எதிர்பாராத வகையில், அந்த விமானத்தின் இறக்கை, போயிங் பி-17 ரக போர் விமானத்தின் மீது மோதியதில், இரு விமானங்களும் நடுவானில் சிதறி, தீப்பிழம்புகளுடன் கீழே விழுந்தன.

போர் விமானங்கள் பறப்பதை தங்கள் செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு, இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. பலரும் இதைப் பார்த்து கண்ணீர் வடித்தனர். போயிங் பி-17 விமானத்தில் 6 பேரும், பி-63 விமானத்தில் ஒருவரும் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்து நேரிட்ட இடத்துக்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

— James T. Yoder (@JamesYoder) November 12, 2022

தொடர் விபத்து

சாகச நிகழ்ச்சிகளின்போது, போர் விமானங்கள் தொடர் விபத்துகளை சந்திக்கின்றன. 2019-ல் கனெக்டிகட் மாகாணத்தில் ஹர்ட்போர்ட் என்ற இடத்தில் நடந்த சாகச நிகழ்ச்சியில், குண்டு வீச்சு விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 7 பேர் உயிரிழந்தனர்.

2011-ல் நெவடா மாகாணத்தில் நடந்தசாகச நிகழ்ச்சியில் பி-51 ரக விமானம்விபத்தில் சிக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். 1982-ம் ஆண்டிலிருந்து போர் விமானங்கள் 21 விபத்துகளை சந்தித்துள்ளன. இதில் 23 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.