“விரைவில் பொதுக்குழுக் கூட்டம்; வாய்ப்பு கிடைத்தால் தினகரனையும் சந்திப்போம்!" – ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமை விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கிடையே கட்சியை கைப்பற்றும் மோதல் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதில் ஒருவரையொருவர் கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக இரு தரப்பும் தெரிவித்துவருகிறது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் தனது தரப்பு ஆதரவாளர்களுடன் புதிய மாவட்ட செயலாளர்களை அவ்வப்போது நியமித்துவருகிறார். இந்த நிலையில், விரைவில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்போவதாக ஓ.பன்னீர்செல்வம் தற்போது தெரிவித்திருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம்

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அ.தி.மு.க சார்பாக கூடிய விரைவில் அனைத்து மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு, பொதுக்குழு கூட்டம் உறுதியாக நடைபெறும். மேலும் அனைத்து நிர்வாகிகளையும் அறிவித்தவுடன் உறுதியாக அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் இருக்கும்.

மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

பிரதமரை வரவேற்றோம், நல்லபடியாக வழியனுப்பி வைத்தோம். அதேபோல் இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சரை சந்தித்தோம். ஆனால் எந்த விதமான அரசியல் நிகழ்வாகப் பேசவில்லை” என்று தெரிவித்தார்.

கடந்த வாரம் பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்தபோது, எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஒரே நேரத்தில் மோடியை வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டி.டி.வி.தினகரன் பற்றி பேசுகையில், “அவரை சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம்” என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் இன்று, தூத்துக்குடி மாவட்டத்துக்கு மூன்று புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.