கான்கெர் சத்தீஸ்கரில், நக்சலைட்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில், பேருந்து உட்பட மூன்று வாகனங்கள், சாலை போடும் இரண்டு இயந்திரங்கள், நான்கு ‘மொபைல் போன்’ கோபுரங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு நக்சல்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இரு நக்சல்கள் கடந்த மாதம் 31ல் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, கான்கெர் மாவட்டத்தில் இன்று ஒரு நாள் முழு அடைப்புக்கு நக்சல்கள் அழைப்பு விடுத்து இருந்தனர். இந்நிலையில், கான்கெர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று முன்தினம் நள்ளிரவில் துவங்கி நேற்று அதிகாலை வரை நக்சல்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
கோயாலிபேடா என்ற இடத்தில் சாலை போடும் பணியில் ஈடுபட்டு இருந்த லாரி மற்றும்டிராக்டரை தீ வைத்து எரித்தனர். சாலை போட பயன்படுத்தப்பட்ட இரண்டு இயந்திரங்களுக்கும் தீ வைத்தனர். அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்தையும் எரித்தனர்.
மேலும், கான்கெர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள நான்கு மொபைல் போன் கோபுரங்களை எரித்தனர். அப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் மரத்தை வெட்டி போட்டு போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து நிலைமையை சீர்செய்தனர். கான்கெர் மாவட்டத்தின் பானுபிரதாபுர் சட்டசபை தொகுதிக்கு அடுத்த மாதம் 5ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த நேரத்தில் வன்முறை வெடித்துள்ளதை அடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement