தேர்தல் விதிமுறைகளை மீறினார் பிரதமர் மோடி? எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

குஜராத் சட்டசபை தேர்தல் 2022: குஜராத் சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (டிசம்பர் 5) நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 34.74 சதவீத வாக்குகள் பதிவாகின என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குபதிவு முடிந்தது, இன்று குஜராத்தில் உள்ள 14 மாவட்டங்களில் மொத்தம் 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து வருகிறது. வாக்குபதிவு முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் என மொத்தம் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்காக சுமார் 26 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ம் தேதி நடைபெறவுள்ளது.

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவும் இன்று வாக்களித்தனர்:
குஜராத் சட்டசபை தேர்தலின் இரண்டாவது கட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான சபர்மதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த ஊரான அகமதாபாத்திலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன்போது பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கை செலுத்தினார். காந்திநகர் ராஜ்பவனில் இருந்து கிளம்பிய பிரதமர் நரேந்திர மோடி, ராணிப் நிஷான் பப்ளிக் பள்ளியில் தனது வாக்கு பதிவு செய்தார்.

அதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது தொகுதியில் வாக்களித்தார். அப்பொழுது செய்தியாளர்களிடையே பேசிய அவர், “அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள், இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார். 

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி வாக்களித்தார். காந்திநகரில் உள்ள ரேசன் தொடக்கப் பள்ளியில் சக்கர நாற்காலியில் வந்து ஹீராபென் மோடி வாக்களித்தார்.

இன்று வாக்களிக்கச் சென்ற பிரதமர் மோடி இரண்டரை மணி நேரம் சாலை பேரணியாக சென்று வாக்கு செலுத்தினார். தேர்தல் நடைபெறும் நாளில் எந்த பிரச்சாரமும், பேரணியும் மேற்கொள்ளக்கூடாது என விதிமுறைகள் இருக்கிறது. தற்போது இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடியின் இந்த பேரணி குறித்து காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் அழுத்தத்தில் இருக்கிறது: காங்கிரஸ்
தேர்தல் விதிகளை மீறி, “அரசியல் பேரணி” நடத்தினார் என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் “மொத்த மௌனம் மற்றும் முழுமையான செயலற்ற தன்மை” குறித்தும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா இன்று செய்தியாளர் சந்திப்பில், “குஜராத்தில் ஆட்சி, கட்சி, நிர்வாகம், தேர்தல் இயந்திரம் என அனைத்தும் ஒன்றாக உருண்டுள்ளது. இதுக்குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்போவதாகவும், தேர்தல் ஆணையம் அழுத்தத்தில் இருப்பதாகத் தெரிகிறது என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.

பாஜக எந்த தவறு செய்தாலும் மன்னிக்கப்படுவார்கள் -முதல்வர் மம்தா பானர்ஜி
‘பிரதமரும் அவரது கட்சியும் எதையும் செய்யலாம்… அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்’ என குஜராத் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் வேளையில், பிரதமர் மோடி மேற்கொண்ட பேரணி குறித்து முதல்வர் மம்தா சாடியுள்ளார். 

வாக்களிக்கும் நாளில் சாலை பேரணிக்கு அனுமதி கிடையாது. அனுமதிக்கப்படாது. ஆனால் பிரதமர் மோடியும் அவரது கட்சியும் விவிஐபிகள். அவர்களால் எதையும் செய்ய முடியும். அவர்கள் மன்னிக்கப்படுவார்கள் -மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாக ANI ஊடகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.