பத்திரிகை அறிக்கையிடலில் பொறுப்புடன் மற்றும் உண்மையைக் கண்டறிந்து செய்தி அறிக்கையிடவும்

பத்திரிகை அறிக்கையிடலில் பொறுப்புடன் மற்றும் உண்மையைக் கண்டறிந்து செய்தி அறிக்கையிடவும் – Sunday Times பத்திரிகையின் ஆசிரியருக்கு சபாநாயகரின் கடுமையான எச்சரிக்கை

  • பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் ஓய்வூதிய வயது தொடர்பில் எந்தக் கலந்துரையாடலும் இடம்பெறவில்லை
  • இந்த செய்தி அறிக்கைக்கு பொறுப்புக்கூறவேண்டிய நபர்களை பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு அழைக்கவும்

பத்திரிகை அறிக்கையிடலில் பொறுப்புடன் மற்றும் உண்மையைக் கண்டறிந்து செய்தி அறிக்கையிடுமாறு Sunday Times பத்திரிகையின் ஆசிரியருக்கு கடுமையாக எச்சரிக்கை விடுப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் இன்று (05) அறிவித்தார்.

2022 டிசம்பர் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை Sunday Times பத்திரிகையில் “Committee rejects move to increase retirement age of Parliament Secretary General” எனும் தலைப்பின் கீழ் பிரசுரிக்கப்பட்ட செய்தியறிக்கை தவறான அறிக்கை என்பதை வலியுறுத்தி மேற்கொண்ட அறிவிப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அண்மையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ அறையில் அவரது தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்றப் பணியாளர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் ஓய்வுபெறுதல் பற்றி எந்தக் கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்றும், அன்றைய தினம் பொதுவாகப் பாராளுமன்றப் பணியாளர்களின் ஓய்வூதிய வயது தொடர்பில் மாத்திரமே கலந்துரையாடப்பட்டது என்றும் சபாநாயகர் வலியுறுத்தினார்.

அந்தப் பத்திரிகை அறிக்கையிடலில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் தனிப்பட்ட பணியாளர்கள் பற்றிய விடயங்கள் தொடர்பிலும் எந்தக் கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும் சபாநாயகர் அறிவித்தார்.

சபாநாயகரின் மேற்படி அறிவிப்புக்கு இணங்கும் வகையில் சபை முதல்வர் கௌரவ சுசில் பிரேமஜயந்த குறிப்பிடுகையில், மேற்கூறப்பட்ட செய்தி அறிக்கையில் உள்ள அனைத்து விடயங்களும் தவறானது எனக் குறிப்பிட்டார். சபாநாயகரின் கீழ் நிர்வகிக்கப்படும் ‘சாவஸ்திரி’ கட்டடம் தொடர்பிலும் பொதுவாகப் பாராளுமன்றப் பணியாளர்களின் ஓய்வூதிய வயதை ஏனைய அரச சேவையயைப் போன்று எந்த மட்டத்தில் பேணுவது என்பது தொடர்பிலும் மாத்திரமே பாராளுமன்றப் பணியாளர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டார். அதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் அல்லது அவரது பணியாளர்கள் தொடர்பில் எந்தவொரு விடயமும் கலந்துரையாடவில்லை என அவர் குறிப்பிட்டார். அதனால் இந்த செய்தி அறிக்கைக்கு பொறுப்புக்கூறவேண்டிய நபர்களை பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு அழைக்குமாறு சபை முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

மேற்கூறப்பட்ட பத்திரிகை அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், அந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் ஓய்வூதிய வயது தொடர்பில் எந்தக் கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும் பொதுவாகப் பாராளுமன்றப் பணியாளர்களின் ஓய்வூதிய வயது தொடர்பில் மாத்திரமே கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றப் பணியாளர்களின் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் சபை முதல்வர் கௌரவ சுசில் பிரேமஜயந்த, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.