மம்மூட்டி நடிப்பில், நிசாம் பஷீர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருந்த படம் ‘ரோர்சாக் (Rorschach)’. மம்மூட்டியின் தாயாரிப்பில் உருவாகிய இப்படத்தில் ஆசீஃப் அலி, கிரேஸ் ஆண்டனி எனப் பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மலையாள மொழியில் உருவாகியிருந்த இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு எனப் பல மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெற்றிவிழா கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இதில் மம்மூட்டி, நிசாம் பஷீர், துல்கர் சல்மான், ஆசீஃப் அலி, கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மம்மூட்டி, இப்படத்தில் சிறப்பாக நடித்திருந்த நடிகர் ஆசீஃப் அலிக்கு ரோலக்ஸ் வாட்ச்சை கிஃப்ட்டாகக் கொடுத்திருந்தார்.

அப்போது பேசிய மம்மூட்டி, “இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு புரொமோஷனுக்காக துபாய் சென்றுகொண்டிருந்தபோது கமல் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச்சை கிஃப்ட் கொடுத்ததாகச் செய்திகள் வந்தன. அந்த படம் (விக்ரம்) சுமார் 500 கோடி ரூபாய் வசூல் செய்தது. அப்படியானால் ரூ.5-6 லட்சம் மதிப்புள்ள வாட்ச் கொடுப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. இதைப்பார்த்துவிட்டு ஆசீஃப் அலி என்னிடம், ‘ரோலக்ஸ் வாட்ச் வாங்கித்தர வேண்டும்’ எனக் கேட்டார்” என்று பேசியிருந்தார்.
மேலும் விழாவில் பேசிய துல்கர் சல்மான், “ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள். இந்தியாவில் நான் எங்கு சென்றாலும், மக்கள் என்னிடம் ‘Rorschach’ பற்றிக் கேட்கிறார்கள். இப்படி ஒரு துணிச்சலான படத்துக்கு அதரவுதந்த ரசிகர்களுக்கு நன்றி. இதுபோன்ற படங்களை மக்கள் பாராட்டும்போது, அது எங்களுக்கு மிகுந்த தைரியத்தை அளிக்கிறது” என்றார்.