சிவகாசி: பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்… கிராம நிர்வாக அதிகாரி, தலையாரி கைது!

சிவகாசி அருகே கீழத்திருத்தங்கல் சிவகாந்தி நகரைச் சேர்ந்தவர் பிரிதிவிராஜ் (வயது 30). இவர் தனக்குச் சொந்தமான நிலத்தின் பட்டா மாறுதலுக்காக சிவகாசி தாலுகா அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி மனு அளித்திருக்கிறார். இந்தமனு, கள விசாரணைக்காக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் உமாவதிக்கு (48) அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பேரில் கிராம நிர்வாக அதிகாரி உமாவதி, தலையாரி பொன்ராஜுடன் சேர்ந்து பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்திருந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறார். இதன்பின்னர், பிரிதிவிராஜை அழைத்துப் பேசிய அவர்கள், பட்டா மாறுதல் செய்து தரவேண்டுமென்றால் ரூ.10ஆயிரம் லஞ்சம் தரவேண்டுமென கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை எனத் தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து பேரம் நடத்தப்பட்டு இறுதியாக ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தந்தால் நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்து தருவதாக கிராம நிர்வாக அதிகாரி உமாவதியும், தலையாரி பொன்ராஜூம் தெரிவித்திருக்கின்றனர். இதனால் வேறு வழியின்றி பிரிதிவிராஜூம் லஞ்சம் தர ஒப்புக்கொண்டுள்ளார்.

பொன்ராஜ்

ஆனால், அதிகாரிகள் கேட்ட 5 ஆயிரம் ரூபாய் லஞ்சப்பணத்தையும் கொடுக்க வழியில்லாமல் திண்டாடிய பிரிதிவிராஜ், பட்டா மாறுதல் செய்ய அதிகாரிகள் லஞ்சம் கேட்டது தொடர்பாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், காவல் ஆய்வாளர் பூமிநாதன் ஆகியோர் பிரிதிவிராஜிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, ரசாயனம் தடவப்பட்ட ரூ.5 ஆயிரம் லஞ்சப்பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பிரிதிவிராஜிடம் கொடுத்தனுப்பினர். இந்த நிலையில், பட்டா மாறுதல் தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி உமாவதி, தலையாரி பொன்ராஜை இன்று சந்தித்த அவர், லஞ்ச ஒழிப்பு போலீஸார் கொடுத்தனுப்பிய ஐந்தாயிரம் ரூபாயை லஞ்சமாக கொடுத்துள்ளார். இந்தப் பணத்தை தலையாரி பொன்ராஜ் பெற்றுக்கொண்டபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி.ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான போலீஸார், லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி உமாவதி, தலையாரி பொன்ராஜ் ஆகிய இருவரையும் கைதுசெய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.