
ஆண்டுதோறும் டிசம்பர் 14-ம் தேதி `சர்வதேச குரங்குகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. குரங்குகள் தினம் எவ்வாறு உருவாகியது என்பதைப் பற்றியும், குரங்குகள் குறித்த சில சுவாரஸ்ய தகவலையும் தெரிந்துகொள்வோம்.

2000-ம் ஆண்டு மெக்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் கேசி சோரோ மற்றும் எரிக் மில்லியன் இருவரும் படித்து வந்தனர்.

எது எதையோ பேசி சிரித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென எரிக் `இன்றைக்கு என்ன தினம்?’ எனக் கேட்டதற்கு, `இன்றைக்கு குரங்கு தினம்’ என நகைச்சுவையாகப் பதில் சொல்லி இருக்கிறார் சோரோ.

`இதில் நகைக்க என்ன இருக்கிறது, இன்றைய தினத்தையே நாம் சர்வதேச குரங்கு தினமாகக் கொண்டாடுவோம்’ என்று பேசி முடிவு செய்த நண்பர்கள், தங்கள் பல்கலைக்கழக கலைப்பிரிவு மாணவர்களுடன் அந்த தினத்தை விடுமுறை தினமாகக் கொண்டாடினர்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு கல்வி நிலையங்களிலும் குரங்கு தினக் கொண்டாட்டம் வைரலானது. விடுமுறையோடு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பாத கேசி சோரோ மற்றும் எரிக் மில்லியன் இருவரும், குரங்குகள் தொடர்பான காமிக்ஸ் மற்றும் கலைப்படைப்புகளை ஆன்லைனில் வெளியிட்டனர்.

கேசி சோரோ மற்றும் எரிக் மில்லியன் இருவரும், குரங்கு பற்றிய கலைப்படைப்புகளை சர்வதேச அளவில் காட்சிப்படுத்தினார்கள். அதன் பிறகு `குரங்கு தினம்’ புகழ் பெற்றது. தற்போது அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் சர்வதேச குரங்கு தினம் பரவலாகக் கொண்டாடப்படுகிறது.

குரங்கு, மிகவும் புத்திசாலித்தனமான, வேகமான மற்றும் குறும்புத்தனமான விலங்கு. குரங்குகளின் செயல்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் பல நிலைகளில் மனிதர்களுடன் ஒத்துப் போகின்றன.

குரங்குகள் முதன்முதலில் தோன்றிய சரியான காலத்தைக் குறிப்பிடுவது கடினம். ஆனால் அவற்றின் தோற்றம் சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

உலகில் 260-க்கும் மேற்பட்ட வகையான குரங்குகள் உள்ளன. அவை, புதிய உலகம் மற்றும் பழைய உலகம் என இரண்டு விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

புதிய உலக குரங்குகள் அமெரிக்காவில் வாழ்கின்றன. பழைய உலக குரங்குகள் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் வாழ்கின்றன. மனிதர்களைப் போலவே குரங்குகளும் வடிவத்திலும் அளவிலும் மாறுபட்டவை.

பொதுவாக குரங்குகள் பற்றிய செய்திகள் சுவாரஸ்யமானவை. குரங்குகள் தினம் உருவான கதையும் சுவாரஸ்யமானது என்பது சிறப்பு. லவ் யூ மங்கீஸ்!