சீன எல்லை மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மறுப்பு: இரு அவைகளில் இருந்தும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுடெல்லி: சீன எல்லை மோதல் தொடர்பாக  விவாதம் நடத்த  அனுமதி அளிக்காததை கண்டித்து மாநிலங்களவை,மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. அருணாச்சல் பிரதேச எல்லையில் இந்தியா -சீன ராணுவம் மோதல் குறித்து ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் விளக்கம் அளித்தார். எனினும், இது குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. இந்நிலையில்,  மாநிலங்களவை நேற்று காலை கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ‘‘கேள்வி நேரத்தை ரத்து செய்ய விட்டு, எல்லையில் நடந்த இந்திய – சீன மோதல் குறித்து விவாதிக்க வேண்டும்’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ், ‘‘இந்த விவகாரம் குறித்து பேச அனுமதி இல்லை’’ என தெரிவித்தார். எல்லை மோதல் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ்,  திமுக,ஆம் ஆத்மி,ராஷ்டிரிய ஜனதாதளம், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்,  திரிணாமூல் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தன. மக்களவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில்,‘‘கடந்த 1962ம் ஆண்டில் நடந்த இந்தோ-சீன போர் குறித்து மறைந்த பிரதமர் நேரு மக்களவையில் விவாதத்துக்கு அனுமதி அளித்தார்.

எனவே, இந்தியா- சீன எல்லை நிலைமை குறித்து விவாதிக்கப்பட வேண்டும்’’ என்றார். உடனே  சபாநாயகர் ஓம்பிர்லா,‘‘ இதுகுறித்து அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்’’ என்றார். இதை தொடர்ந்து அன்றைய நடவடிக்கைகளை அவர் தொடங்கினார். இதையடுத்து காங்கிரஸ்,திரிணாமுல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே முன்னாள் ஒன்றிய அமைச்சர் சசி தரூர் பேசும்போது,‘‘ எந்தவித பதில்,விளக்கமும் இல்லாமல் சிறிய அறிக்கை அளிப்பது, அடுத்தவர்கள்  பேச்சையோ, கருத்தையோ கேட்காமல் இருப்பது ஜனநாயகம் இல்லை.சீனாவுடன் 5 ஆண்டுகளாக எல்லை பிரச்னை நீடிக்கும் நிலையில், அரசு பொறுப்புடன் நாடாளுமன்றத்தில் நடந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

* 17 எதிர்க்கட்சிகள் ஆலோசனை
நேற்று அவை தொடங்குவதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சித் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் நாடாளுமன்றத்தில் சீனா விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டாக செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டது. காங்கிரஸ், திமுக, சிவசேனா(உத்தவ் தாக்கரே), இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்,தேசியவாத காங்கிரஸ்,ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்பட 17 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.