வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அல் ரய்யான்: உலக கோப்பை கால்பந்தில் மூன்றாவது இடம் பிடித்தது குரோஷியா. நேற்று நடந்த போட்டியில் மொராக்கோவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
உலக கோப்பை கால்பந்து தொடரின் 22வது சீசன் கத்தாரில் நடக்கிறது. இதன் அரையிறுதியில் தோல்வியடைந்த குரோஷியா, மொராக்கோ அணிகள், மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மோதின. அல் ரய்யானில் உள்ள காலிபா சர்வதேச மைதானத்தில் இப்போட்டி நடந்தது.
இரு அணிகள் ஏற்கனவே மோதிய லீக் போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது. இம்முறை துவக்கத்தில் இருந்தே அனல் பறந்தது. போட்டி துவங்கிய 7வது நிமிடத்தில் இவான் பெரிசிச் பந்தை தலையால் முட்டி ஜோஸ்கோவுக்கு ‘பாஸ்’ செய்தார். மொராக்கோ கோல் போஸ்டுக்கு அருகில் இருந்த ஜோஸ்கோ, அப்படியே மீண்டும் தலையால் முட்டி, வலைக்குள் தள்ள, குரோஷிய அணி 1-0 என முன்னிலை பெற்றது.
இம்மகிழ்ச்சி சிறிது நேரம் கூட குரோஷியாவுக்கு நீடிக்கவில்லை. அடுத்த 2 வது நிமிடத்தில் ஜோஸ்கோ செய்த ‘பவுல்’ காரணமாக மொராக்கோவுக்கு ‘பிரீ கிக்’ கிடைத்தது. இம்முறை அச்ரப் தாரி (9வது நிமிடம்), தலையால் பந்தை முட்டி கோலாக மாற்றினார். ஸ்கோர் 1-1 என சமன் ஆனது. போட்டியின் 42வது நிமிடத்தில் மொராக்கோ வீரரிடம் இருந்து பந்தை லாவகமாகப் பெற்ற லிவாஜா, ஆர்சிச்சிடம் தள்ளினார். அதே வேகத்தில் அப்படியே வலது காலால் பந்தை உயரமாக துாக்கி விட்டார்.
இது, அங்கிருந்த மொராக்கோ கோல் கீப்பர் பவுனோவை ஏமாற்றி வலைக்குள் சென்றது. முதல் பாதி முடிவில் குரோஷிய அணி 2-1 என முந்தியது குரோஷியா. இரண்டாவது பாதியில் மொராக்கோ எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் குரோஷிய அணி 2-1 என வெற்றி பெற்று, 2வது முறையாக மூன்றாவது இடம் பிடித்தது. ரூ. 223 கோடி பரிசுத் தொகையை தட்டிச் சென்றது. முதன் முறையாக நான்காவது இடம் பெற்ற மொராக்கோ அணிக்கு ரூ. 207 கிடைத்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
