சீரற்ற காலநிலையினால் மலையக ரெயில் சேவைகள் தற்காலிகமாக வரையறுக்கப்பட்டுள்ளன.
சில இடங்களில் மண்மேடு சரிந்து விழுந்திருப்பதானாலேயே ரெயில் போக்குவரத்து வரையறுக்கப்பட்டிருப்பதாக ரெயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (25) இரவு சேவையில் ஈடுபடவிருந்த கொழும்பு-பதுளை, பதுளை-கொழும்பு ஆகிய இரண்டு இரவு நேர தபால் ரயில்களும், கோட்டையிலிருந்து காலை 9:45 மணிக்கு பதுளை நோக்கிச் செல்லவிருந்த ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிலிமத்தலாவயில் இருந்து பேராதனை வரையான ரெயில் பாதையில்; மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. உலப்பனை பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்திருப்பதனால் பதுளையில் இருந்து கொழும்பிற்கான ரெயில் சேவை நாவலப்பிட்டி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கடுகண்ணாவையில் இருந்து கம்பளை வரையான ரெயில் பாதையில் மண்மேடு சரிந்து விழுந்ததால் ரெயில் சேவை தடைப்பட்டுள்ளது. விரைவில் ரெயில் பாதையை சீர்செய்து சேவையை முன்னெடுக்க உள்ளதாக ரெயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கண்டியில் இருந்து மாத்தளை வரையான ரெயில் பாதையிலும் மண்மேடு சரிந்து விழுந்ததால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டிருக்கிறது.