நேற்று துப்பாக்கிச்சூடு.. இன்று குண்டுவெடிப்பு..! காஷ்மீர் விரைந்தது தேசிய புலனாய்வு அமைப்பு

ரஜோரி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்த பகுதிக்கு தேசிய புலனாய்வு அமைப்பு விரைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்துக்குட்பட்ட டாங்கிரி கிராமத்தில் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த 2 தீவிரவாதிகள், அங்கிருந்த 3 வீடுகளில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில், தப்பியோடிய தீவிரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இந்நிலையில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய டாங்கிரி கிராமத்தில், அதிகாலை கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் ஒரு குழந்தை உயிரிழந்தது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தை சுற்றிவளைத்து பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சோதனையில், மற்றொரு கண்ணி வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கண்ணி வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்து ராணுவம், துணை ராணுவப் படையினர், காவல்துறையினர் அங்கு அதிகளவில் குவிக்கப்பட்டனர். காடுகளில் புகுந்தும், ட்ரோன்கள் மூலமாகவும் தீவிரவாதிகளை தேடி வந்தனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்த பகுதிக்கு தேசிய புலனாய்வு அமைப்பு விரைந்துள்ளது.

நிவாரணம் அறிவிப்பு
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், குடும்பத்தின் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் அறிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.