பண்ணை வீட்டில் அபூர்வ வெளிநாட்டு பறவைகள் மீட்பு : கன்னட நடிகர் தர்ஷன் மீது வழக்கு பதிவு

மைசூரு : கன்னட நடிகர் தர்ஷன் பண்ணை வீட்டில் சட்டத்துக்கு புறம்பாக வளர்த்து வந்த நான்கு அபூர்வ வெளிநாட்டு பறவைகளை வனத்துறை மீட்டுள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மைசூரு மாவட்டம், டி.நரசிபுரா சாலையில் கெம்பய்யனஹுண்டி கிராமத்தில் பிரபல கன்னட நடிகர் தர்ஷனுக்கு சொந்தமான பண்ணை வீடு அமைந்துள்ளது. மைசூரு வரும் போதும், நீண்ட படப்பிடிப்புக்கு பின்னரும் தர்ஷன் பண்ணை வீட்டுக்கு வந்து ஓய்வு எடுப்பது வழக்கம். இங்கு பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் வளர்க்கிறார். இந்திய வன விலங்கு சட்டப்படி, தனியார் நபர்கள் வளர்க்கும் பறவைகள், விலங்குகளுக்கு வனத்துறையிடம் அனுமதி பெறுவது கட்டாயம்.

இதற்கிடையில், வனத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையிலான அதிகாரிகள், தர்ஷன் பண்ணை வீட்டில் நேற்று முன்தினம் இரவு திடீரென சோதனை நடத்தினர். அப்போது அனுமதி பெறாமல் வளர்த்து வந்த நான்கு அபூர்வ வெளிநாட்டு ரக வரித்தலை வாத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. தர்ஷன் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது.

இது குறித்து, வனத்துறை அதிகாரி பாஸ்கர் கூறியதாவது: இத்தகைய வாத்துகள் வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். வனப்பகுதியில் சுதந்திரமாக இருப்பதற்கு விட வேண்டும். மிருகக் காட்சி சாலையில் வளர்ப்பதும் குற்றமே. எனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பறவைகள், டி.நரசிபுரா அருகில் உள்ள ஹதினார் ஏரியில் விடுவதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெறப்படும். மேலும் பல பறவை இனங்கள் பண்ணை வீட்டில் வளர்க்கப்படுகின்றன. இவற்றை வளர்க்கலாம். ஆனால் உரிமையாளருக்கான சான்றிதழ் காண்பிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.