காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம் – சென்னை வந்த முதியவருக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சிறப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை முதியவர் கிரண் சேத் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னை வந்த அவருக்கு தன்னார்வலர்கள் சார்பில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

டெல்லியை சேர்ந்தவர் கிரண் சேத். இவர் டெல்லி ஐஐடியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 73 வயதாகும் இவர், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சிறப்புகள் மற்றும் காந்திய சிந்தனைகள், யோகா குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ‘ஸ்பிக்மேகே’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்புக்கு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கிளைகள் உள்ளன. இந்த அமைப்பின் கருப்பொருள் குறித்து மாணவர்களுக்கு விளக்கவும், அமைப்புக்கு புதிய தன்னார்வலர்களை சேர்க்கவும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தனி நபராக சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இவர் கடந்த ஆண்டு ஆக.15-ம் தேதி காஷ்மீர் நகரில் தனது பயணத்தை தொங்கினார். கடந்த 6-ம் தேதி பெங்களூரு வழியாக, தமிழகத்தில் ஓசூருக்கு வந்தார். இவர் தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ள உள்ளார். இவர் நேற்று சென்னை வந்தடைந்தார். அவரை ஸ்பிக்மேகே அமைப்பின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் ஜெய கண்ணன் மற்றும் தன்னார்வலர்கள் பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவர் தனது பயண அனுபவம் குறித்து நேற்று ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

நான் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம், காந்திய சிந்தனைகள் உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொள்கிறேன். எனது சைக்கிளில் ஜிபிஎஸ் கருவி இல்லை. கியர் இல்லை. காந்தியை போன்று எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக எளிய சைக்கிளில் பயணித்து வருகிறேன். எனக்காக 3 மாற்று உடைகளை மட்டுமே கொண்டு வந்துள்ளேன். செல்லும் இடங்களில் எல்லாம் பள்ளி, கல்லூரி மாணவர்களை சந்தித்து, நமது கலாச்சாரம், பாரம்பரியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். எனது பயணத்தை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் அமைத்துக்கொண்டேன். வரும் பிப்ரவரி 19-ம் தேதி வாக்கில் கன்னியாகுமரியை அடைய இருக்கிறேன்.

இவ்வாறு இந்தியாவை சுற்றிவரும்போதுதான் நாட்டின் இயற்கை அழகையும், மொழி, கலாச்சாரம் போன்றவற்றில் உள்ளபன்முகத் தன்மையையும் புரிந்துகொள்ள முடிகிறது. காஷ்மீரில் உள்ள பசுமை அழகு, பஞ்சாபில் உள்ள கண்ணுக்கெட்டிய தூரம் வரை உள்ள கடுகு பயிரின் மஞ்சள் நிற மலர்கள், அழகிய வேளாண் நிலங்கள், உத்திர பிரதேசத்தில் உள்ள புராதன சின்னங்கள், கோயில்கள், மகாராஷ்டிர மாநில ஆரஞ்சு தோட்டங்கள், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ளபாறைகளால் ஆன மலைகள், தமிழகத்தில் குறிப்பாக காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சியம்மன், வரதராஜ பெருமாள், ஏகாம்பரநாதர் கோயில்களின் கலைநயம் போன்றவை என்னை வெகுவாகக் கவர்ந்தன. தமிழகத்தின் கர்னாடக இசை மற்றும் பரதநாட்டியமும் எனக்கு மிகவும் பிடிக்கும். பயணத்தின் நடுவே கடும் மூட்டுவலி ஏற்படும். அதை பொருட்படுத்தாமல் இந்த பயணத்தை தொடர்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.