கிளாம்பாக்கம் மெட்ரோ: ரெடியான பஸ் ஸ்டாண்ட்… கூடவே வந்த மெகா சர்ப்ரைஸ்!

தலைநகர் சென்னையில் போக்குவரத்தை எளிமைப்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் சேவை அமலில் இருக்கிறது. தற்போது இரண்டு விதமான வழித்தடங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவை விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் வரையிலான நீல வழித்தடம், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலான பச்சை வழித்தடம் ஆகியவை ஆகும். அடுத்தகட்டமாக மூன்று வழித்தடங்களில் புதிய மெட்ரோ ரயில் சேவையை வழங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

மெட்ரோ வழித்தடங்கள்

அதன்படி, ஊதா வழித்தடத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையும், காவி வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை வரையும், சிவப்பு வழித்தடத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த மூன்று சேவைகளும் வரும் 2026ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு

இதற்கிடையில் விமான நிலையம் வரையிலான நீல வழித்தடத்தை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டது. ஏனெனில் சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நெரிசலை குறைக்கும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

சி.எம்.டி.ஏ தகவல்

வரும் பிப்ரவரி 15ஆம் தேதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு விழா நடைபெறும் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் இனிமேல் கோயம்பேடு செல்ல வேண்டியதில்லை. நேரடியாக கிளாம்பாக்கம் சென்றுவிடலாம்.

புதிய வழித்தட பேருந்துகள்

இதற்காக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. எனவே மெட்ரோ ரயில் மூலமும் கிளாம்பாக்கம் செல்வதற்கு திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இதற்கான வரைவு திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

கிடப்பில் போடப்பட்ட பணிகள்

பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டதால் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் வரைவு அறிக்கையின் தற்போதைய நிலவரம் என்னவென்று கேள்வி எழுந்தது. இதுகுறித்து தமிழ்நாடு அரசிடம் தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) மூலம் கேள்வி எழுப்பப்பட்டது.

உயர்மட்ட குழு ஒப்புதல்

அதற்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிக்கும் திட்டத்திற்கு தலைமைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. 15.8 கிலோமீட்டர் நீளத்தில் 12 உயர்மட்ட ரயில் நிலையங்கள் உடன் மெட்ரோ ரயில் பாதை அமைவதாக பதில் கிடைத்துள்ளது.

அடுத்த 3 ஆண்டுகள்

இது சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக அமைந்திருக்கிறது. விரைவில் நீல வழித்தடத்தை நீட்டிக்கும் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழித்தடப் பணிகள் முடிவடைய அடுத்த 3 ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.