வாஹீர் நீர்மூழ்கி கப்பல் கடற்படையில் சேர்ப்பு | Induction of Waheer submarine fleet

மும்பை, :இந்திய கடற்படைக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய, ‘ஐ.என்.எஸ்., வாஹீர்’ என்ற நீர்மூழ்கி கப்பல், நேற்று கடற்படையில் சேர்க்கப்பட்டது.

ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தொழில்நுட்ப உதவியுடன், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில், ‘ஐ.என்.எஸ்., வாஹீர்’ என்ற, நீர்மூழ்கி கப்பலை தயாரிக்கும் பணி நடந்து வந்தது.

பணிகள் முழுமையாக முடிவடைந்து, வெள்ளோட்டம் பார்க்கும் பணிகளும் நடந்து வந்தன. இதையடுத்து, இந்த கப்பல் இந்திய கடற்படையில் நேற்று முறைப்படி இணைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி, கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.ஹரிகுமார் முன்னிலையில் நடந்தது.

இது குறித்து, இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த புதிய நீர்மூழ்கி கப்பலால் நம் கடற்படையின் பலம் மேலும் அதிகரித்துள்ளது.

எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை தடுப்பது, கண்காணிப்பு மற்றும் உளவு பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றில் இந்த கப்பலின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். நம் நாட்டின் கடல்சார் நலன்களை மேம்படுத்துவதற்கும் உதவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கடற்படை தளபதி ஹரிகுமார் கூறுகையில், ”கடந்த, 24 மாதங்களில் வகிரையும் சேர்த்து, இதுவரை மூன்று கப்பல்கள் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன.

”இதன் வாயிலாக இந்திய கப்பல் கட்டும் தொழிலின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. நம் ராணுவத்தின் பலமும் அதிகரித்துள்ளது,” என்றார்.

வாஹீர் என்ற வார்த்தைக்கு, மணல் சுறா என அர்த்தம். பயமின்றி தாக்குதல் நடத்துவது, ரகசிய கண்காணிப்பு ஆகியவற்றில் மணல் சுறாக்கள் சிறப்பாக செயல்படும் என்பதால், இந்த நீர்மூழ்கி கப்பலுக்கும் இதே பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடல் பகுதியில், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஐ.என்.எஸ்., வாஹீர் கப்பலின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது.

கப்பலின் சிறப்பம்சம் என்ன?

இதில், உலகின் மிகச் சிறந்த சென்சார் தொழில்நுட்பம் உள்ளது. எதிரி நாட்டின் மிகப் பெரிய படையை முற்றிலும் தகர்த்து அழிக்கும் திறன் உடைய ஏவுகணைகள், இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகளுக்கு, நீர்பரப்பில் இருந்து,எதிரிகளின் நிலப்பரப்பை தாக்கும் திறன் உண்டு இந்த கப்பலில், சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ படையும் தயார் நிலையில் இருக்கும். இதில் உள்ள பேட்டரிகளை, சக்திவாய்ந்த இன்ஜின் வாயிலாக விரைவாக சார்ஜ் செய்ய முடியும் இந்த கப்பல், டீசல் மற்றும் பேட்டரியில் இயங்கக் கூடியது. அதிக சப்தம் எழுப்பாமல், எதிரிகளுக்கு போக்கு காட்டும் திறன் உடையது கடலுக்கு அடியில், 350 மீட்டர் ஆழம் வரை மூழ்கிச் செல்லும் தொழில்நுட்ப வசதி உடையது. இந்த கப்பல், அதிகபட்சமாக இரண்டு வாரம் வரை கடலுக்கு அடியில் தங்கியிருக்க முடியும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.