மாணவர்கள் போராட்டத்தால் பதவி விலகிய அடூர் கோபாலகிருஷ்ணன்

மலையாள திரைகளில் மிக பிரபலமான கதாசிரியரும், இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் பல நல்ல கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்திருக்கிறார். கேரளாவில் மதிப்பிற்குரிய மனிதராக கருதப்படும் இவர் கோட்டயம் மாவட்டத்தில் காஞ்சிரமட்டம் பகுதியில் உள்ள கே ஆர் நாராயணன் தேசிய காட்சி அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் சேர்மன் ஆகவும் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்த கல்லூரியில் டைரக்டராக பொறுப்பு வகித்த சங்கர் மோகன் என்பவர் மாணவர்களிடம் சாதி பாகுபாடு காட்டுகிறார் என்பது உள்ளிட்ட பல காரணங்களை கூறி அவரை மாற்றக்கோரி கிட்டத்தட்ட 48 நாட்கள் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு சங்கர் மோகன் தனது பதவியை ராஜினாமா செய்து விலகினார்.

இந்த நிலையில் தற்போது தனது சேர்மன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து ராஜினாமா செய்துள்ளார் அடூர் கோபாலகிருஷ்ணன். இது பற்றி அவர் கூறும்போது, சங்கர் மோகன் இந்த கல்லூரிக்காகத்தான் தனது உழைப்பை கொடுத்து வந்தார். ஆனால் அவருக்கு எதிராக இப்படி ஒரு போராட்டத்தை தூண்டி விட்டதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். ஒரு நல்ல மனிதரை இந்த கல்லூரியை விட்டு தானாகவே வெளியேறும்படி ஒரு சூழலை உருவாக்கி விட்டார்கள். இதைத்தொடர்ந்து நானும் இந்த சேர்மன் பதவியில் இருந்து விலகுகிறேன். இது குறித்து சில நாட்களாகவே கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேசி வந்தேன். இப்போது திடமாக இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார் அடூர் கோபாலகிருஷ்ணன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.