அகமதாபாத் : இந்தியாவின் முதல் செமி கண்டக்டர் சிப் தொழிற்சாலை குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே அமைகிறது. காா் உள்ளிட்ட வாகனங்கள், கைப்பேசிகள், பிற மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் செமிகண்டக்டா் சிப்-கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை. மாறாக, இந்த சிப்களுக்காக இறக்குமதியை இந்தியா சாா்ந்துள்ளது. உலகில் 8 சதவீத செமிகண்டக்டா் சிப்களை தைவான், சீனா, ஜப்பான் ஆகிய 3 நாடுகள் உற்பத்தி செய்கின்றன. இந்த நிலையில், இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலையை அமைக்க பல பன்னாட்டு நிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தின.
பேச்சுவார்த்தையின் இறுதியாக இந்திய தொழில் நிறுவனமான வேதாந்தா மற்றும் தைவானின் மின்னணு பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் இணைந்து குஜராத்தில் செமிகண்டக்டா் சிப் தொழிற்சாலை மற்றும் மின்னணு சாதனங்களுக்கான திரை தயாரிப்புப் பிரிவை நிறுவ மாநில அரசுடன் கடந்த செப்டம்பர் மாதம் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. செமி கண்டக்டர் ஆலை அமைப்பதற்காக இரு நிறுவனங்களும் ரூ.1.54 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளன. இந்த நிலையில், இந்தியாவின் முதல் செமி கண்டக்டர் சிப் தொழிற்சாலை குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே அமைகிறது. செமி கண்டக்டர் ஆலை அமைப்பதற்காக அகமதாபாத் அருகே டோலெரா பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.