காவல் துறையின் சிறப்பான செயல்பாட்டால் தமிழகத்தில் இரு ஆண்டுகளாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை: டிஜிபி சைலேந்திரபாபு

ஶ்ரீவில்லிபுத்தூர்: காவல் துறையின் சிறப்பான செயல்பாட்டால் தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக ஜாதி கலவரம், மத கலவரம் உள்ளிட்ட எந்த சட்ட ஒழுங்கு பிரச்சினையும் இல்லை என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மொட்டமலை பகுதியில் உள்ள ராஜபாளையம் 11-வது பட்டாலியன் படைப்பிரிடில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘இந்தியாவில் புலன் விசாரணையில் முதல் இடத்தில் தமிழக காவல்துறை உள்ளது. மத்திய பிரதேசத்தில் நடந்த காவல் துறையினருக்கான தேசிய அளவிலான பணித்திறன் போட்டியில் தமிழக காவல்துறை 8 தங்கம் உட்பட 11 பதக்கங்கள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் ரிவால்வர் பிரிவில் முதல் முறையாக தமிழக காவல்துறையை சேர்ந்த கான்ஸ்டபிள் தங்கப்பதக்கம் வென்று அசத்தி உள்ளார். அந்த போட்டியில் சிஆர்பிஎப், பிஎஸ்எப் படை பிரிவுகளை பின்னுக்கு தள்ளி தமிழக காவல் துறை சாம்பியன் பட்டம் வென்றது.

1995-96 ஆண்டுகளில் ராஜபாளையம் பகுதியில் மிகப்பெரிய சாதி கலவரம் நடைபெற்றது. அந்த கலவரத்தில் 48 கொலைகள் நடந்தது. அப்போது நான் ராஜபாளையம் கேம்பில் 8 மாதம் தங்கி இருந்து பணியாற்றி இருக்கிறேன். ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக காவல் துறையின் சிறப்பான செயல்பட்டால் தமிழகத்தில் சாதி, மத கலவரம் இல்லை. வடமாநில கொள்ளை, தொடர் கொலை உள்ளிட்ட எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் தமிழகத்தில் இல்லை.

தமிழகம் அமைதியாக இருப்பதற்கு காரணம் பட்டாலியன் படைப்பிரிவு. காவல் துறைக்கு பலமாக ராணுவம் போன்று பட்டாலியன் படை பிரிவு செயல்பட்டு வருகிறது. நான் டிஜிபியாக பொறுப்பேற்ற பின் ஆயிரம் சார்பு ஆய்வாளர்கள், 10 ஆயிரம் காவலர்கள் பணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். சார்பு ஆய்வாளர் பணிக்கு புதிதாக 444 பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் உள்ளனர். தற்போது 3,600 காவலர் பணிக்கு தேர்வு முடிந்துள்ளது. வரும் மே மாதம் புதிதாக 600 சார்பு ஆய்வாளர்கள், 3,600 காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சிறந்த காவலர்கள் பணி ஓய்வுக்கு பின்னும் தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்திற்கு பணி வாய்ப்பு உள்ளது. போலீஸார் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்றால் ரூ.5 லட்சமும், வெள்ளி வென்றால் ரூ.3 லட்சம் ரொக்க பரிசாக வழங்கப்படுகிறது. காவலர்கள் விளையாட்டுகளிலும் ஆர்வமுடன் கலந்து கொள்ள வேண்டும், இவ்வாறு பேசினார்.

காவலர்களின் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தமிழக காவல் துறையில் மகளிர் போலீஸார் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பொன்விழாவாக கொண்டாடப்படுகிறது. அதில் மகளிர் போலீஸாருக்கு 9 சிறப்பு திட்டங்களை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். போக்சோ வழக்குகளில் காவல் துறையை எடுத்து வரும் நடவடிக்கைகளால் குற்றவாளிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. போகோ குற்றங்களை முழுமையாக தடுப்பதற்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

பட்டாலியனில் அமைக்கப்பட்ட பூந்தோட்டத்தை டிஜிபி சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.

இடமாற்றத்தில் சிபாரிசுக்கு இடமில்லை: அமைச்சு பணியாளர்களுடன் டிஜிபி சைலேந்திரபாபு பேசுகையில், ‘காவல்துறையில் பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே இடமாற்றம் செய்யப்படுகிறது. பணி மாற்றத்தில் சிபாரிசுக்கு இடமில்லை. அப்படி இருந்தும் சிலர் சிபாரிசுடன் வருகின்றனர்’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.