கார்ட்னர்-ஹேமலதா அதிரடி: குஜராத் 178 ரன்கள் குவிப்பு…!

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும்.

அதாவது புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடும். 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிசுற்றை எட்டும். இதுவரை நடைபெற்றுள்ள ஆட்டங்களை பொறுத்தவரையில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.இதில் முதலாவது ஆட்டத்தில் குஜராத் – உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷோபியா டங்க்லி மற்றும் லாரா வோல்வார்ட் ஆகியோர் களம் இறங்கினர்.

தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை 41 ரன்னில் பிரிந்தது. லாரா வோல்வார்ட் 17 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய ஹார்லீன் தியோல் 4 ரன்னிலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷோபியா டங்க்லி 23 ரன்னிலும் வீழ்ந்தனர். இதையடுத்து தயாளன் ஹேமலதா மற்றும் ஆஷ்லே கார்ட்னர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை உ.பி. அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கியது.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹேமலதா 30 பந்தில் அரைசதத்தை அடித்து அசத்தினார். அவர் 33 பந்தில் 57 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து ஆஷ்லே கார்ட்னருடன் சுஷ்மா வெர்மா ஜோடி சேர்ந்தார். இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிரடியில் மிரட்டிய கார்ட்னர் 39 பந்தில் 60 ரன்னும், ஹேமலதா 33 பந்தில் 57 ரன்னும் எடுத்தனர்.

உ.பி.வாரியர்ஸ் அணி தரப்பில் ராஜேஸ்வரி கெய்க்வாட், பர்ஷவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டும், அஞ்சலி ஷர்வானி, ஷோபி எக்லெஸ்டோன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. அணி ஆட உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.