ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா; தமிழக சட்டப் பேரவையில் மீண்டும் நிறைவேறியது!

இணையப் பயன்பாடு அதிகரித்து விட்ட சூழலில் ஆன்லைன் வாயிலான விளையாட்டுகளுக்கு அடிமையாவதும் அதிகரித்து வருகிறது. அதில் ஆன்லைன் ரம்மி என்பது மிக மோசமான நிலைக்கு தள்ளி கொண்டிருக்கிறது. இதில் பணத்தை இழந்து வேறு வழியின்றி உயிரை மாய்த்து கொண்ட பலரை தமிழகம் கண்கூடாகப் பார்த்திருக்கிறது.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா

இந்த அவலத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தனர். அதன்பிறகு தமிழக அரசிடம் இருந்து ஆளுநர் சில விளக்கங்களை கேட்டார். அதற்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. பின்னர் ஆளுநரை நேரில் சந்தித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்தார்.

ஆளுநர் அளித்த ஏமாற்றம்

இருப்பினும் அவர் உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளிக்காத காரணத்தால் மசோதா காலாவதியானது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் இன்று தமிழக சட்டப் பேரவையில் முதல்வர்

தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மனித உயிர்களை பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. எந்த சட்டத்தின் நோக்கமும் மக்கள் நலன் மட்டும் தான். மாநில மக்களை காப்பது ஒன்றே சட்டத்தின் கடமை. மனசாட்சியை அடகு வைத்து விட்டு எங்களால் செயல்பட முடியாது. மாநிலத்தில் உள்ள மக்களை காக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு.

மாநில அரசுக்கு உரிமை

மீண்டும் சொல்கிறேன் மாநில அரசுக்கு உரிமை உண்டு. இந்த ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா, அறிவால் மட்டுமல்ல இதயத்தாலும் உருவாக்கப்பட்டது. எனவே ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை உறுப்பினர்கள் நிறைவேற்றி தர வேண்டும். மசோதா ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் என்று ஸ்டாலின் கூறினார்.

யார் பொறுப்பு?

இதையடுத்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களை ஆளுநர் ரவி சந்தித்தில் உள்நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. மக்கள் தான் எஜமானர்கள், ஆளுநர்கள் அல்ல எனக் கூறினார். பின்னர் பேசிய கொங்கு ஈஸ்வரன், ஆன்லைன் சூதாட்டத்தால் இழந்த உயிர்களுக்கு யார் பொறுப்பு.

மசோதா நிறைவேற்றம்

இன்னும் தாமதப்படுத்தினால் சட்டமன்றத்தையும், மாநில மக்களையும் ஆளுநர் அவமதிப்பதாகவே எடுத்துக் கொள்ள முடியும் என்றார். ஷாநவாஸ் பேசுகையில், தமிழ்நாடு அரசு சட்டத்திற்கு புறம்பாக எதையும் செய்யவில்லை.

ஆளுநருக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்கிறது. ஆளுநர் நியமனங்களில் மாநில அரசுகளின் கருத்து கேட்கப்பட வேண்டும் என்று கூறினார். இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தெரிவிக்க ஒருமனதாக மசோதா நிறைவேறியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.